டாஸ்மாக்கில் சரவெடி.. ரூ.10 ஜாஸ்தி? நொந்துபோன குடிமகன்.. விடாத அதிமுக.. தமிழக அரசின் நச் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றினை தமிழக அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.. அத்துடன் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் பதிலளித்திருக்கிறார்.
நம் தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே கலைந்து, காற்றிலும் கரைந்து போய் கொண்டிருக்கிறது.. மாறாக, டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டி கொண்டிருக்கிறது.. அரசுக்கு வரும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகம்: அந்தவகையில், தற்சமயம் மாநிலத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. அந்தவகையில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.
இதைத்தவிர, ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற முறைகேட்டினை தடுக்கவே, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு "விலை பட்டியல்" நடைமுறைப்படுத்தப்பட்டது.
கூடுதல் வசூல்: ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் இருப்பதாகவும், ஆங்காங்கே 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து கொண்டேயிருப்பதாகவும் மதுப்பிரியர்கள் நொந்து போய் சொல்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர் முத்துசாமி ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.5, ரூ.10 கூடுதலாக வாங்குவது 99 சதவீதம் தடுக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது குறுகிய காலத்துக்குள் செய்ய முடியாது. அதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் போது அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு எந்திரம் வழங்கப்பட்டு, மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்படும் என்று உறுதி தந்திருந்தார்.
கண்டனம்: எனினும், நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், உயர்நீதிமன்ற ஆணைப்படி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் டெண்டரை கடந்த 3 ஆண்டுகளாக கோராமல் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு, அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார்.. அதில், "காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்கும்போது உயா்நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன்படியே, காலிப்பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை டாஸ்மாக் நிா்வாகம் ரத்து செய்தது.
ரசீது இயந்திரங்கள்: மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வங்கிகள் மூலமாக மின்னணு கருவிகள் நிறுவப்பட்டு பணப்பரிவா்த்தனைகள் நடைபெறுகின்றன. மேலும், ரசீது இயந்திரங்கள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 மாதங்களுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் ரசீது இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள், மது அருந்தும் கூடங்களில் தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளாா்.
நிம்மதி: 2 மாதங்களில் ரசீது முறை அமல்படுத்தப்பட்டுவிட்டால், இனி டாஸ்மாக்குகளில் முறைகேடுகள் எழ வாய்ப்பிருக்காது என்றே நம்பப்படுகிறது. அந்தவகையில் அமைச்சரின் இந்த அறிவிப்பானது, குடிமகன்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications