"ரூ.2.58 கோடி வரி.." நோட்டீஸை பார்த்து அதிர்ந்த பெண்! ஆனா அடுத்து அவர் செய்த செயலால் வரியே இல்லாம போச்சு
சென்னை: நமது நாட்டில் இன்னுமே கூட வரி தாக்கல் செய்யும் நடைமுறை ஈஸியாகவில்லை. இதனால் வரி தாக்கல் செய்யும்போது செய்யும் சிறு பிழைகளும் பெரிய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. அப்படித் தான் பெண் ஒருவர் செய்த சிறு பிழையால் அவர் ரூ.2.58 கோடி வரி கட்ட வேண்டி வந்துள்ளது. அதில் இருந்து அவர் எப்படி எஸ்கேப் ஆனார் என்பதை நாம் பார்க்கலாம்.
சிறு வரிப் பிழைகள்கூட சில சமயங்களில் மிகப் பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு உதாரணமாக, பாட்னாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கு நிலம் விற்ற ஒரு பெண்ணுக்கு ₹2.58 கோடி வரி நோட்டீஸ் வந்துள்ளது. சீமா என்பவர் நிலம் விற்ற போது செய்த ஒரு சிறிய வரி தாக்கல் பிழையால் இந்தச் சிக்கல் எழுந்தது.

ரூ.2.58 கோடி வரி நோட்டீஸ்
டேக்ஸ்பட்டி (TaxBuddy) என்ற கணக்கில் இருந்து இது தொடர்பான தகவல்கள் லிங்க்ட்இன் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீமா தனது நிலத்தை ₹2.87 கோடிக்கு விற்று, டெல்லியில் ₹2.62 கோடிக்கு ஒரு வீடு வாங்கி இருக்கிறார்.. ஏதேனும் ஒரு சொத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயங்களை அடுத்துக் குடியிருப்பு வீட்டில் முதலீடு செய்யும்போது, பிரிவு 54F இன் கீழ் வரி விலக்கு பெற அவர் தகுதியுடையவராக இருந்தார்.
ஆனால், வரி தாக்கல் செய்யும்போது சீமா மூலதன ஆதாய வரி விலக்கைப் பிரிவு 54இன் கீழ் தவறாகக் கோரினார். அதாவது 54Fஇன் சீமா வரி விலக்கு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக சீமா பிரிவு 54இன் கீழ் கோரிக்கை விடுத்தார். இதனால், மதிப்பீட்டு அதிகாரி சீமாவின் கோரிக்கையை நிராகரித்தார். நிலம் பிரிவு 54இன் கீழ் வராது என்று அவர் குறிப்பிட்டார். பிரிவு 54Fஐ அவர் சரியாகக் கோராததால், ₹2.58 கோடி நீண்டகால மூலதன ஆதாய வரி முழுமையாக விதிக்கப்பட்டது.
வரி அதிகரிப்பு
இதனால் சீமாவின் மொத்த வருமானம் ₹21 லட்சத்திலிருந்து ₹2.79 கோடியாக அதிகரித்து, இதனால் அவர் செலுத்த வேண்டிய வருமான வரியும் அதிகரித்து. இதை எதிர்த்து சீமா வருமான வரி மேல்முறையீட்டு ஆணையரிடம் (CIT(A)) மேல்முறையீடு செய்தார். ஆனால், மேல்முறையீடு ஆணையரும் மதிப்பீட்டு அதிகாரியின் முடிவு சரி என்றே கூறியிருக்கிறார். பிரிவு 54Fக்கான நிபந்தனைகளை சீமா நிரூபிக்கவில்லை என்று ஆணையர் குறிப்பிட்டார்.
வரி தாக்கல் செய்யும்போது சிறிய தவறுகள் செய்தால் சட்டப்பூர்வ விளக்கங்களைப் பெற்றுவிட்டு, அவை சரியாக இருந்தால் விட்டுவிடலாம்.. அபராதங்கள் தேவையில்லை என்று முன்பே நேரடி வரிகள் துறை சுற்றறிக்கை அளித்திருந்தது. இருப்பினும், அதைப் புறக்கணித்த அதிகாரிகள், சீமா கூடுதல் வரி செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மேல்முறையீடு
இருப்பினும், சீமா தரப்பு வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் இதைக் கொண்டு சென்றது. நிலம் விற்று வந்த தொகையைக் குடியிருப்பில் முதலீடு செய்ததற்கான விற்பனை மற்றும் கொள்முதல் பத்திரங்களை சீமாவின் வழக்கறிஞர் சமர்ப்பித்தார். இதன் மூலம் பிரிவு 54Fஇன் அனைத்து நிபந்தனைகளையும் அவர் பூர்த்தி செய்ததாக நிரூபிக்கப்பட்டது. மேலும், பிழைகளை விட நியாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நேரடி வரிகள் துறையின் சுற்றறிக்கையையும் அவர் மேற்கோள் காட்டினார்.
கடைசியில் வரி இல்லை
இதையடுத்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சீமா தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டது. வரி தாக்கலில் போது செய்த சிறிய தவறை காரணமாகக் காட்டி தகுதியான விலக்குகளைப் பெறுவதைத் தடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது. மேலும், பிரிவு 54Fஇன் கீழ் விலக்கு கோர சீமாவுக்குத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன் மூலம் அவருக்கு ₹2.58 கோடி மிச்சம்.
வரி தாக்கலில் துல்லியமான தகவல்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. மேலும், வரி செலுத்துவோர் தங்கள் உரிமைகளையும், அவர்களைப் பாதுகாக்கும் சட்ட விதிகளையும் அறிந்திருந்தால், சிறிய தவறுகளுக்குப் பெரிய அபராதம் கட்டும் சூழலைத் தவிர்க்கலாம் என்பதையும் இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications