சென்னை எழும்பூரில் பிரான்ஸ் பெண்ணின் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு.. டீ கடைக்காரருக்கு வந்த ஆசை!
சென்னை: சென்னையை பூர்விகமாக கொண்ட பிரான்ஸ் நாட்டு பெண்ணின் ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயன்ற டீ கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தயார் செய்து வீட்டை அபகரித்து வேறு ஒருவரிடம் விற்க முயன்றபோது, பிரான்ஸ் பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடியாக டீ கடைக்காரரை கைது செய்துள்ளனர்.
சென்னையை பூர்விகமாக கொண்டு பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் மேரி பிரான்சிஸ். இவருக்கு சென்னை எழும்பூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள வீடு ஒன்று இருந்தது. இந்த நிலையில் இவரது ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை போலி ஆவணங்கள் மூலமாக சிலர் அபகரித்துள்ளனர். மேலும் இந்த வீட்டை அபகரித்ததோடு, வேறு ஒருவருக்கு விற்கும் முயற்சிகளும் நடந்து வந்தன.

இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் மேரி பிரான்சிஸ்க்கு தெரியவந்தது. இதுபற்றி விசாரித்ததில், சில போலியான ஆவணங்களை தயார் செய்து தற்போது விற்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து தனது பவர் அதிகாரம் பெற்ற ஜான் மகேந்திரன் என்பவர் மூலமாக இந்த மோசடி தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
வீட்டை அபகரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண், இந்த புகார் மனு மீது விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் சிபுகுமார், இன்ஸ்பெக்டர் மேரி ராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து போலீசார் புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கினர். இதில், ரபி பேக் என்பவர் தான் பிரான்ஸ் நாட்டு பெண்ணின் வீட்டை அபகரித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரபி பேக்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ரபி பேக் சென்னை எழும்பூரில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த மோசடியில் ஈடுபடுவதற்காக இவரது வீட்டில் வேலை செய்யும் ஆட்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது.
அதாவது தன் வீட்டில் வேலை செய்யும் ரோசி, அவரது மகள் ஜுலி மற்றும் தனது மகன் இம்ரான் ஆகிய 3 பேரையும் பிரான்ஸ் நாட்டு பெண்ணின் வீட்டை அபகரிக்க ஈடுபடுத்தியுள்ளார். இதையடுத்து ரோசி, ஜுலி மற்றும் இம்ரானையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 4 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு பெண்ணின் நிலம் பத்திரமாக மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications