சென்னை மக்களுக்கு.. ஒரு நாள் ஊதியத்தை கொடுக்கும் ஆசிரியர்கள்! சம்பளத்தில் பிடித்தம் செய்ய கடிதம்
சென்னை: புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிதி மக்களின் துயரத்தை துடைக்க உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னையை ஒட்டி ஆந்திரா பகுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னைக்கு வழக்கத்தை விட 29 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிவை கொடுத்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியது.

மழை நின்ற சில மணி நேரங்களில் பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும், இன்னும் இடுப்பளவுக்கு பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களுக்குள் மீட்பு படையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல உணவு தேவைப்படுவோருக்கு படகில் சென்று உணவு விநியோகிக்கப்படுகிறது.
மறுபுறம் வெள்ளம் காரணமாக தடைப்பட்டிருந்த மாநகர பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகின்றன. புறநகர் ரயில் சேவையும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. இந்நிலையில் பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அந்த வகையில் ஆசிரியர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக முதலமைச்சருக்கும் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அதில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் எங்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஏற்கெனவே வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு, ரூ.5,060 கோடியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மட்டுமல்லாது மத்திய குழுவை அனுப்ப பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications