டெலியோஸ்-2 செயற்கைக்கோள்..விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-55..இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் தரிசனம்
சென்னை: சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டெலியோஸ் (TeLEOS-02) செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் ஏப்ரல் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்துகின்றனர். விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி - சி 55 ராக்கெட் மாதிரியுடன் திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் இன்று காலை வழிபாடு நடத்தினர்.
சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் Newspace India Limited நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். டெலியோஸ்-2 செயற்கைக்கோள் புவி ஆய்வுக்கு பயன்படும்.
டெலியோஸ் செயற்கைக்கோள் 750 கிலோ எடை கொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது செயற்கை துளை ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுத்திறனில் தரவை வழங்கும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள்கள் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் (Polar Satellite Launch Vehicle-C55) இந்தாண்டின் மூன்றாவது மிஷன் ஆகும். தற்போது வரை இஸ்ரோ 2 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தாண்டின் தனது முதல் திட்டத்தை பதிவு செய்தது.
அதைதொடர்ந்து எல்.வி.எம்-3 மூலம் வணிக செயல்பாட்டிற்கான 36 ஒன்வெப் செயற்கைக்கோளை மார்ச் மாதம் இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியது. இந்நிலையில் இம்மாதம் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட்டை செலுத்த தயாராகி வருகிறது. இது மற்றொரு வணிகப் பயன்பாட்டு திட்டமாகும்.
வணிகச் சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் அரசின் திட்டம் வலுபெற்று வருகிறது. இது தற்போதைய 2 சதவிகித விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. புதிய அணுகுமுறையானது, விண்வெளி நிறுவனம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே நாளை விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி - சி55 ராக்கெட் மாதிரியுடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் இன்று காலை கோயிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு நாளை விண்ணில் ஏவும் பணி வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமென்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர். அந்த குழுவில் இஸ்ரோவின் சந்தோஷ், யசோதா, சீனிவாச குப்தா, வனஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications