விடுதலை போராளியை நாடு இழந்தது! அரசியல் வரலாற்றில் அழியாத குன்றாக நிற்கும் சங்கரய்யா!-தமிமுன் அன்சாரி
சென்னை: நாடு ஒரு விடுதலைப் போராளியை இழந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவுக்கு தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் சங்கரய்யாவோடு இணைந்து தேர்தல் பரப்புரை செய்தது தனக்கு கிடைத்த புரட்சிகரமான அனுபவம் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது;

நேர்மையான அரசியல்: ''முதுபெரும் இடதுசாரி தலைவர் தோழர்.சங்கரய்யா மறைந்தார் என்ற செய்தி (102) மிகுந்த துயரமளிக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர், தொழிலாளர்களின் போர் குரல், நேர்மையான அரசியலின் முகவரி என பல அடையாளங்களுடன் வாழ்ந்த அந்த தலைவர், தமிழ்நாட்டு மக்களின் மரியாதைக்குரியவராக திகழ்ந்தார்.
சங்கரய்யாவோடு இணைந்து பரப்புரை: மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி , எளிய மக்களின் ஜனநாயக குரலாய் செயல்பட்டார்.
அவர் அக்கட்சியின் மாநிலச்செயலாளராக இருந்தபோது, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் அவரோடு இணைந்து தேர்தல் பரப்புரை செய்தது எனக்கு கிடைத்த புரட்சிகரமான அனுபவமாகும்.
வரலாற்றில் அழியாத குன்று: இவரைப் போன்ற அரசியல் தலைவர்கள்தான் வேண்டும் என பொதுமக்கள் விரும்பக்கூடிய அளவுக்கு, அவரது வாழ்க்கை கண்ணியமாக இருந்துள்ளது. இன்று அவர் விடைபெற்றிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் அழியாத குன்றாக உயர்ந்து நிற்கிறார்.
விடுதலை போராளி: செம்படையினர் தங்களது கட்டளை தளபதியை இழந்துள்ளனர். நாடு ஒரு ஒரு விடுதலை போராளியை இழந்துள்ளது. சிவந்த விழிகளின் கண்ணீரில் மனித நேய ஜனநாயக கட்சி உணர்வார்ந்த துயரத்துடன் பங்கேற்கிறது. அவரை இழந்து துடிக்கும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.'' இவ்வாறு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications