அங்கிட்டு 'தங்கம்'... இங்கிட்டு கலைச்செல்வன்'... தினகரனை விட்டு போய் திக்கு தெரியாமல் திகைப்பு!
சென்னை: தினகரனின் அமமுகவை விட்டு வெளியேறிய தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்.
தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, ஆயிரக்கணக்கானோரை திரட்டி திமுகவில் சேர்த்தார். அத்துடன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வானார்.
செந்தில் பாலாஜி பாணியில் திமுகவுக்கு வந்தார் தங்க தமிழ்ச்செல்வன். ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் இப்போது எங்கே இருக்கிறார் என தெரியாத அளவுக்கு முடங்கிப் போய்விட்டார்.

எந்த கோஷ்டியில் சேருவது?
ஏனெனில் தேனி மாவட்ட திமுகவில் ஏகப்பட்ட கோஷ்டிகள். இதில் யாருடன் கை கோர்ப்பது? யாரை சந்திப்பது? தனி கோஷ்டியாகவே ஆவர்த்தனம் செய்யலாமா? என எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறார். தேனி மாவட்டத்தில் திமுக இல்லாமல் போனதற்கு காரணமே இந்த கோஷ்டி பஞ்சாயத்துதான்.

பதவிக்காக தங்கம் காத்திருப்பு
ஆனாலும் திமுக மேலிடம் இன்னமும் இந்த விவகாரத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியாவது தமக்கு வரும் என காத்திருக்கிறாராம் தங்க தமிழ்ச்செல்வன்.

கலைச்செல்வன் எம்.எல்.ஏ.
இதேபோல் தினகரனிடம் இருந்து விலகி மீண்டும் அதிமுகவுக்கே போன விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கதியும்தான்.. அவருக்கும் அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான்.

கலைச்செல்வன் வேதனை
இதனாலேயே தினகரன் கட்சிக்கு போனவர்... முதல்வர் எடப்பாடி தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் அதிமுகவுக்கு திரும்பினார் கலைச்செல்வன். ஆனாலும் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் முன்னிலையே கலைச்செல்வனுக்கு கொடுக்கும் குடைச்சல்களால் மிகவும் நொந்துகிடக்கிறாராம்.

தினகரன் கட்சியில் மகிழ்ச்சி
இப்படி தங்களை விட்டு விலகியவர்கள் திசை தெரியாமல் முழித்து கொண்டிருப்பதை தினகரன் தரப்பு நமட்டு சிரிப்புடன் பார்த்து வருகிறது. போகிறவர்கள் போகட்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறதாம் தினகரன் தரப்பு.


Click it and Unblock the Notifications
