தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் சொத்து குவிப்பு வழக்கு! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-2011-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தார் தங்கம் தென்னரசு. அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி அனைவரையும் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதேபோல 2006-2011 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது. 2012ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் விசாரணை நீதிமன்றங்களின் இந்த விடுதலைத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து (சூமோட்டா) விசாரணை நடத்தினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் வரை இருவரும் சென்றனர்.
ஆனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து அதிரடித் தீர்ப்பளித்தார்.
அத்துடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சிகளின் விசாரணையை தொடங்க வேண்டும்; இந்த விசாரணை நாள்தோறும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இருவரும் செப்டம்பர் 9ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களும் முக்கிய துறைகளை கவனித்து வருகின்றனர். வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, உள்துறை பொறுப்பை கவனிக்கும் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நியாயமான விசாரணை நடைபெற நீதியின் நலனை பாதுகாக்க, புலன் விசாரணை அதிகாரியும், அரசுத்தரப்பு வழக்கறிஞரும் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும், அதனால் இரு வழக்குகளையும் நடத்த அரசுத்தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், இரு அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications