முதல்வர் ஒன்னும் மத அரசியல் செய்யல.. என்ன நியாயம் இது? மக்கள் கேட்டுட்டு இருக்காங்க! விளாசிய அப்பாவு
சென்னை: தஞ்சாவூர் தேர் விபத்து பற்றி இன்று அதிமுகவினர் சட்டசபையில் அமளியில் ஈடுப்பட்டனர். தொடர் அமளியை அடுத்து அதிமுகவினர் அவையில் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவையில் நடந்த அமளி குறித்து சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் நீண்ட விளக்கம் அளித்தார்.
தஞ்சாவூர் தேர் விபத்து பற்றி இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டது. இதில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மகாமகம் குளத்தில் ஏற்பட்ட விபத்து பற்றி பேசினார்.
ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை. கும்பகோணம் மகாமக விழாவிலும் 48 பேர் இறந்தார்கள் என்று என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சம்பவம் என்பதால் இதை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு
இவரின் பேச்சை எதிர்த்து அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா செய்தனர். அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். கும்பகோணம் மகாமக விபத்து பற்றி சட்டசபையில் பேசியது தவறு, ஜெயலலிதா பெயரை குறிப்பிட்டு சட்டசபையில் செல்வ பெருந்தகை பேசியது தவறு. திமுகவினரின் தூண்டுதல் காரணமாகவே செல்வப்பெருந்தகை பேசியுள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேசினார். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

விளக்கம்
அதிமுகவினரை வெளியேறும்படி சபாநாயகர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அதிமுகவினரை வெளியேற்றியது ஏன் என்பது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் விபத்து பற்றி தெரிந்ததும் சட்டசபையில் அதை பற்றி தெரிவித்துவிட்டு, தஞ்சைக்கு சென்று இருக்கிறார். விபத்து பற்றி கேள்வி பட்டதும் தாய் உள்ளத்துடன் அவர் தஞ்சை சென்று இருக்கிறார். அங்கு பல வருடமாக சப்பர திருவிழா நடக்கிறது. இன்று அசம்பாவிதம் நடந்துவிட்டது. இதை பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எல்லா உறுப்பினர்களும் இன்று அவையில் பேசினார்கள்.

என்ன சொன்னார்?
எல்லோரும் கருத்துக்களை தெரிவித்தனர். எம்எல்ஏ செல்வப்பெருந்தகையும் இதில் கருத்து தெரிவித்தார். அவர் யாரையும் பற்றி தவறாக பேசவில்லை. அம்மையார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த மகாமக விபத்து பற்றி பேசினார். அப்போது சட்டசபையில் அவை குறிப்பில் ஜெயலலிதா என்ன பேசினாரோ அதைத்தான் இன்று அவையில் செல்வப் பெருந்தகை பேசினார்.

சபாநாயகர் அப்பாவு
ஆனால் அதை அதிமுகவினர் அவை குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறார்கள். செல்வ பெருந்தகை சொன்னதை நீக்க வேண்டும் என்றால் முன்பு அம்மையார் பேசியதை நீக்க வேண்டும். அதைத்தான் எதிர்கட்சித் தலைவர் கேட்கிறாரா? செல்வப்பெருந்தகை தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவ்வளவுதான். அதிலும் அதிமுக உறுப்பினர்கள் பேசி முடித்துவிட்டனர். அவர்கள் இடையூறு இன்றி பேசி முடித்துவிட்டனர்.

முதல்வர் பேச்சு
பின்னர் பேசி முடித்துவிட்டு அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். பின்னர் மீண்டும் வந்து தர்ணா செய்து பேச நினைப்பதில் என்ன நியாயம்? மக்கள் நமது விவாதங்களை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அரசு எல்லா மதத்தையும் மதிக்க கூடிய, எல்லா மதத்திற்கும் வாய்ப்பு வழங்க கூடிய, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த கூடிய அரசு. விருப்பு வெறுப்பு இல்லாத அரசு நம்முடைய அரசு.

மத அரசியல்
வெளிநாட்டில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா முழுக்க சென்று பார்த்துள்ளனர். அப்போது தமிழ்நாடு வந்த அதிகாரிகளிடம் ஆளுநர் தமிழ்நாட்டை பாராட்டி பேசினார். மிகவும் பாதுகாப்பான்மாநிலம் தமிழ்நாடு என்று ஆளுநர் கூறினார். மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் முதல்வருக்கு இல்லை. மதத்தை அரசியல் செய்யாத ஆட்சி இங்கே நடந்து கொண்டு இருக்கிறது. எல்லா மக்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

நெருடல்
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நெருடல் ஏற்பட கூடாது. நெருடல் ஏற்படுத்தும் வகையில் பேச கூடாது என்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம். சட்டசபை நாகரீகமாக நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நடந்த விஷயங்களை மட்டுமே சட்டசபையில் செல்வ பெருந்தகை பேசினார். அதில் என்ன தவறு இருக்க முடியும், என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications