அன்று ஜெயலலிதா வழக்கில் "சிக்கிய" பாத்திமா பீவியை போல்! ஆளுநர் ரவி ராஜினாமா செய்வாரா? தராசு ஷியாம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் தவறாக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக உச்சநீதிமன்றம் கண்டித்ததை அடுத்து அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி ராஜினாமா செய்ததுபோல் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமான வழக்கில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ 50 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பொன்முடி , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பும் தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் பொன்முடி குற்றமற்றவர் என்ற அர்த்தமாகிறது. இந்த நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு உச்சநீதிமன்ற நகலுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால் ஆளுநர் ரவியோ, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறிவிட்டார். இதையடுத்து தமிழக அரசு, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடியின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகும் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது, ஆளுநருக்கு சட்டம் தெரியுமா தெரியாதா, நாளைக்குள் பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்காவிட்டால் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம் என காட்டமாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஆளுநர் ரவியை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறுகையில் அனைவருக்குமே எது தவறு, எது சரி என்பது தெரியும். அதன்படி அவர்கள் நடந்து கொள்வார்கள்.
ஆனால் ஆளுநர் ரவியோ இது தவறு என தெரிந்தும் அதையே அவர் திரும்ப திரும்ப செய்கிறார் என்றால் அது ஏன் என தெரியவில்லை. பொன்முடியின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் அவர் எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார். எனவே ஒரு எம்எல்ஏவை அமைச்சராக்கும் உரிமை முதல்வர் ஸ்டாலினும் உண்டு. அவர் கடிதம் அளித்தும் அதை ஆளுநர் செய்யாதது தவறு. கடந்த 2001 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, எம்எல்ஏவாக இல்லாத ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்தார், இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் கே. அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது உச்சநீதிமன்றம் எம்எல்ஏவாக இல்லாத ஒருவருக்கு எப்படி முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தீர்கள் என கேள்வி எழுப்பியது. இதையடுத்து முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும் அமைச்சரவையையும் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து பாத்திமா பீவி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவராக ராஜினாமா செய்தாரோ, இல்லை, டெல்லி அறிவுறுத்தியதா என தெரியவில்லை. அது போல் தொடர்ந்து நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகும் ரவியை மத்திய அரசு ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என தராசு ஷியாம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா வழக்கின் பின்னணி: தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடவில்லை, காரணம், டான்சி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் போட்டியிட தகுதியில்லை. எனினும் 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் ஒன்று கூடி தேர்தலில் போட்டியிட முடியாத ஜெயலலிதாவை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்தால் அவர்தான் முதல்வர் என அர்த்தம். இதையடுத்து ஆளுநராக இருந்த பாத்திமா பீவியிடம் ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினர். அதன் பேரில் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவை, ஆளுநர் பீவி அழைத்திருந்தது எதிர்பார்க்காத டிவிஸ்ட்டாக இருந்தது.
தேர்தலில் போட்டியிடாத ஒருவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரின் வேட்புமனுக்களே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் திமுகவின் கே அன்பழகன் உச்சநீதிமன்றம் வரை சென்று ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையை தகுதி நீக்கம் செய்ய வைத்தார்.












Click it and Unblock the Notifications