அந்த 30% வாக்குகள் ‘குறி’ ; சீமான் வந்தால் வில்லங்கம்? ராகுல் பக்கம் விஜய்! தவெக கணக்கு
சென்னை: 20 முதல் 30% வரை உள்ள மத மற்றும் மொழி சிறுபான்மை வாக்குகளை தன் பக்கம் இழுக்கவே சீமானுடனான கூட்டணியை நடிகர் விஜய் நிராகரித்துள்ளார் என்று ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் சீமான். கிட்டத்தட்ட 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அப்படி என்றால், தம்பி விஜய்க்கு ஒன்று என்றால் குரல் கொடுக்க அண்ணன் நான் இருக்கிறேன் என்று அவர் கடந்த ஆறு மாதங்களாக விஜய் ஆதரவு நிலையை எடுத்திருந்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்தே சீமான் மற்றும் விஜய் சந்திப்பு பல முறை நடந்துள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டும் சீமானை 10 முறைக்கு மேல் விஜய் தனிமையில் சந்தித்துள்ளார் என்கிறார்கள். அதில் பெரும்பாலான சந்திப்புகளில் ஈசிஆர் சாலையில் காரில் பேசிக் கொண்டே பயணித்தார்கள் என ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.
ஆனால், இறுதியில் விஜய்தான் சீமானை வேண்டாம் என நிராகரித்து இருக்கிறார். அதற்கான காரணம் மிக வெளிப்படையானது. அவர் எடுத்த எடுப்பிலேயே கூட்டணி வைத்தால் மக்கள் இவர் மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள். மேலும் ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்த பிறகு, ஒரு மாற்றுச் சக்தியாக தவெகவை எப்படி முன்வைக்க முடியும்? அதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏளனமாக மேடை போட்டு விமர்சிக்க வாய்ப்பு வருமே என்றும் அவருக்குச் சிலர் ஆலோசனை வழங்கி உள்ளன.
இதில் சீமானை தேர்வு செய்யாததற்கு ஒரு கூடுதல் காரணமும் முன்வைக்கப்படுகிறது. சீமானுக்கு இதுவரை இந்துக்களின் ஓட்டுகள்தான் விழுந்தன. அவர் இஸ்லாமியப் பிரதிநிதிகளைத் தேர்தலில் நிறுத்தினாலும் அவரது கட்சியைச் சிறுபான்மை மக்கள் நம்பி வாக்களிக்கவில்லை. அதைப் பல முறை அமீர் போன்றவர்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். அத்துடன் சீமான் எந்த நேரத்திலும் அவர் ஒரு இந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஆகவே அவரை சிறுபான்மையினர் புறக்கணித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாகக் கூட இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினர் தனக்கு வாக்களிக்கவில்லை என்றும் வெளிப்படையாகவே சீமான் பேசி இருக்கிறார். ஆக, மத சிறுபான்மையினருடன் மொழிவழி சிறுபான்மையினரும் சீமானை ஏற்கவில்லை. தருமபுரி போன்ற தொகுதிகளில் அருந்ததிய மக்கள் ஆரம்பக்கட்டத்தில் சீமானை ஆதரித்து வாக்களித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து தமிழர்தான் ஆளவேண்டும் என ஆவேசமாகப் பேசுவதால் அம்மக்களின் வாக்குகள் இப்போது சீமானுக்கு விழுவதில்லை.
எனவே அனைவருக்கும் பொதுவான அடையாளத்துடன் அரசியல் களத்தில் இறங்கும் விஜய் எடுத்த எடுப்பிலேயே சிறுபான்மை மதத்திற்கு எதிராக உள்ள சீமானுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. மேலும் தமிழர் என்கிற அடையாளத்தை விஜய் தூக்கிப் பிடித்தால் அவர் கேரளாவில் உள்ள ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டும். கூடவே தமிழ்நாட்டில் உள்ள கேரள மக்களின் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் எனக் கணிசமான மக்களை விஜய் இழக்கலாம். சீமான் கொடியுடன் விஜய் பல ஊர்களில் நுழைவதில் தயக்கம் உள்ளது. அதை எல்லாம் மனதில் வைத்துத்தான் அவர் சீமானிடம் தான் தனித்து நிற்கப்போவதாகத் தெளிவு படுத்திவிட்டார். அதை உணர்ந்த பிறகே சீமான் தனித்து போட்டி என்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களில் சிறுபான்மையினர் வாக்கு என்பது பல தொகுதிகளில் 20% மேல் உள்ளது. கூடவே மொழி சிறுபான்மையினரையும் சேர்த்தால் இந்த வாக்குவங்கி 30% வரும். அதை மொத்தமாக திமுக அறுவடை செய்துவிட்டால் விஜய் வளர முடியாது. இந்த வாக்குகளில் பாதியை தன் பக்கம் இழுப்பதே விஜய்யின் குறியாக உள்ளது. அதாவது விஜயகாந்த் விட்டு வைத்துள்ள அந்த இடைவெளி. கூடுதலாக சில கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் வாக்கு. இதை எல்லாம் விஜய் மனதில் ஏற்றிக் கொண்டுள்ளார்.
அதேபோல சீமான் தரப்பு என்பதிலும் இதே விவகாரம் அலசப்பட்டுள்ளது. அதில், சீமனை 3% க்கும் மேலான விஜய் ரசிகர்கள் ஆதரித்து வருகின்றனர். அவர்கள் சினிமா என்றால் விஜய், அரசியல் என்றால் சீமான் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள். அதை இணைய தளத்தில் விஜய் ரசிகர்கள் பதிவிடும் கருத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும். அதற்காக ஒரு பூதக்கண்ணாடி எல்லாம் தேவை இல்லை. இப்போதுதான் 8% என எட்டியுள்ள நிலையில் அதில் 3% ஓட்டுகளை விஜய்யுடன் கூட்டணி வைத்து இழக்க வேண்டுமா என்றும் சீமான் யோசித்துக் கொண்டுள்ளார்.
மேலும் விஜய் மாநாட்டுக்கு ராகுல்காந்தி உறுதியாகக் கலந்து கொள்வார் என்கிறார்கள். அவரின் வருகை இருந்தால், அது சீமானை சீண்டும் விதமாகவே இருக்கும். ஏனெனில் காங்கிரஸ் இனத்தை அழித்த கட்சி என்று தனது தொடக்கக் காலத்திலிருந்தே சீமான் பேசி வருகிறார். அதற்குக் கூட்டாக இருந்தது திமுக என்கிறார். ஒரு பக்கம் சீமானை உட்கார வைத்துக் கொண்டு எப்படி ராகுல்காந்தியுடன் விஜய் கைக் குலுக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
சமீப காலமாகச் சீமானை பாஜக இழுக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. அதை அண்ணாமலை 'மூவ்' மூலம் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். சீமானின் கடந்த கால அரசியலை உற்றுப் பார்க்கும் போது அவர் தனது கட்சி சார்பாகச் சிலரைச் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில் காட்டும் அக்கரையைவிட அவர் ஓட்டுக்களைப் பிரித்து சிலரை ஆதாயம் அடையவைக்கும் யுத்தியை அதிகம் கடைப்பிடித்து வருகிறார். அதேபோல 2026 மாயாவதி போல் பாஜகவுக்குச் சாதகமாக ஓட்டைப் பிரிக்க துணைப் போய்விட்டால் என்ன செய்வது? என்று சில விஜய்யிடம் ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டியதாகவும் சொல்கிறார்கள்.
விஜய்க்குப் பிரிவினைவாத அரசியல் மீது நம்பிக்கை இல்லை. அவர் இனவாதம் மதவாதம் இதற்கு எதிராகவே தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறார். என்னதான் சீமான் அரசியலில் சீனியராக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டில் பெரிய கட்சி அல்ல. அவரைவிட அதிமுக, திமுக பெரிய கட்சிகள். விஜய் நினைத்தால் இந்தக் கட்சிகளுடனேயே கூட்டணி வைக்க முடியும். நிச்சயம் அவர் கமலைவிடப் பெரிய சக்தி. எனவே அவர் சீமானை தேர்வு செய்வது எளிது. அந்த எளியதைச் செய்ய அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டியது இல்லை. அதை உணர்ந்தே அவர் சீமானுக்கு குட் பை சொல்லி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications