திமுகவா இருந்திருந்தா இந்நேரம்.. கதையே வேற. ஆளுநர் வீட்டிற்கு ஏறி ஏறி இறங்கும் விஜய்.. அவமானம்
சென்னை: தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பில் சிக்கியுள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு மிக அருகில் இருந்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுத்து வரும் அடுத்தடுத்த தவறான முடிவுகள், அவரை ஒரு 'அரசியல் கத்துக்குட்டியாக' காட்டுகிறதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று முறை சந்திப்பு - முதிர்ச்சியா? அவசரமா?
வெறும் இரண்டு நாட்களில் மூன்று முறை ஆளுநரைச் சந்தித்ததுதான் விஜய்யின் முதல் சறுக்கல். ஒரு கட்சியின் தலைவர் ஆளுநரைச் சந்திப்பது என்பது ஒரு வலிமையான அரசியல் நகர்வாக இருக்க வேண்டுமே தவிர, அது கெஞ்சும் செயலாக இருக்கக் கூடாது. 107 எம்.எல்.ஏ-க்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஒரு தலைவர், இவ்வளவு அவசரமாக ஆளுநர் மாளிகையின் படிக்கட்டுகளை ஏறி இறங்குவது "ஆட்சி அதிகாரத்திற்காகத் தவிக்கிறார்" என்கிற பிம்பத்தையே மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.
நீதிமன்றத்தை நாடாதது ஏன்? தி.மு.க-விடம் பாடம் கற்க வேண்டாமா?
இங்கேதான் தி.மு.க-வின் அரசியல் தந்திரம் தவெக-விற்குப் புரியாமல் போயிருக்கிறது. இதே சூழலில் தி.மு.க இருந்திருந்தால், ஆளுநர் மாளிகையைச் சுற்றி வந்து நேரத்தை வீணடித்திருக்க மாட்டார்கள். 107 இடங்களைப் பிடித்த 'மிகப்பெரிய ஒற்றைக் கட்சி' (Single Largest Party) என்கிற தகுதியை வைத்துக்கொண்டு, ஒருமுறை ஆளுநர் அழைக்கவில்லை என்றால் மறுமுறை அவர்கள் நேராக நீதிமன்றத்தை நாடியிருப்பார்கள்.

சட்டமன்றத்தில் ஒரு கட்சிக்கு முழு மெஜாரிட்டி இல்லாதபோது, மிகப்பெரிய கட்சியைத்தான் முதலில் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பது ஜனநாயக மரபு. இதை நிலைநாட்ட 'Mandamus' மனு ஒன்றைத் தாக்கல் செய்து, நீதிமன்றம் மூலம் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தவெக தரப்பு சட்ட ரீதியான இந்த வலிமையான ஆயுதத்தைக் கையில் எடுக்கத் தவறிவிட்டது. விஜய் மற்றும் தவெக ஒன்றும் தி.மு.க கிடையாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
கார் கையெழுத்து - அரசியலா? அமேச்சூர் தனமா?
அமமுக எம்.எல்.ஏ காமராஜின் ஆதரவு கடிதம் விவகாரம் விஜய்யின் இமேஜை வெகுவாகச் சிதைத்துள்ளது. கார் ஒன்றில் அமர வைத்து அவசரம் அவசரமாகக் கையெழுத்து வாங்கிய வீடியோவை ஆதாரமாக வெளியிட்டது 'அமேச்சூர்' அரசியலின் உச்சம். "தவெக தரப்பில் யாருமே பேசாமல், காமராஜே கடிதத்தைத் தட்டச்சு செய்துவிட்டு, கார் வந்தவுடன் கையெழுத்து மட்டும் போடுகிறாரா?" என அரசியல் விமர்சகர்கள் கிண்டலடிக்கின்றனர். இது என்ன இன்ஸ்டாகிராம் ரீல்ஸா? ஒரு கட்சியின் எம்.எல்.ஏ-விடம் இப்படித்தான் ஆதரவு கோருவார்களா?
சுற்றியிருக்கும் 'முட்டாள்கள்' மற்றும் முதிர்ச்சியின்மை
116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு, 120 என கணக்கு காட்டி ஆளுநரிடம் சென்றது மாபெரும் வரலாற்றுத் தவறு. ஆளுநர் மாளிகைக்கு எம்.எல்.ஏ-க்களை அழைத்துச் செல்வதை விடுத்து, தனது நண்பர்களையும், அதிகார மையத்தில் இல்லாதவர்களையும் அழைத்துச் சென்றது ஏன்? செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இருந்தும், அவர்கள் ஏன் விஜய்க்கு முறையான ஆலோசனை வழங்கவில்லை? ஆட்சியமைக்கும் முன்பே நண்பர்களின் தலையீடு இப்படி இருந்தால், ஆட்சிக்கு வந்தால் நிலைமை என்னவாகும் என்கிற கேள்வி எழுகிறது.
குதிரை பேரம் புகாரும் தவெக-வின் மௌனமும்
டிடிவி தினகரன் 'கடத்தல்' மற்றும் 'குதிரை பேரம்' என அதிரடி புகார்களை அடுக்கி மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும், தவெக தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கம் வராதது ஏன்? இந்த மௌனம் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போல உள்ளது.
விஜய் அவர்களே, உங்களைச் சுற்றியிருக்கும் 'முட்டாள்களை' முதலில் வெளியேற்றுங்கள். அவர்கள் தரும் தவறான ஐடியாக்கள் உங்களைச் சிக்கலில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. 107 எம்.எல்.ஏ-க்களின் பலத்தை வைத்துக்கொண்டு சட்ட ரீதியாகப் போராடுவதை விடுத்து, ஆளுநர் மாளிகையைச் சுற்றுவது உங்கள் அரசியல் பலவீனத்தையே காட்டுகிறது. தி.மு.க போன்ற கட்சிகள் சட்ட நுணுக்கங்களை எப்படிக் கையாள்கின்றன என்பதைப் பார்த்துப் பாடம் கற்கத் தவறினால், இந்த 107 எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைப்பதே உங்களுக்குப் பெரும் சவாலாகிவிடும்!












Click it and Unblock the Notifications