சென்னை ஏர்போர்ட்டில் விமானத்தில் ஏறிய சிறுவன் செய்த சேட்டை.. பதறிய விமானி.. நொந்து போன பயணிகள்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த கொல்கத்தா விமானத்தில் 17 வயது சிறுவன் அவசரகால கதவை திறக்க முயன்றதில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்திலுள்ள பன்னாட்டு விமான நிலையம் இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று. இந்தியாவில் டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவு சரக்குகளைக் கையாளும் விமான நிலையமாக இருக்கிறது. மேலும் மிக மிக அதிகமான பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் விளங்குகிறது.

ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாண்டு வருகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் நாள் தோறும் வந்து செல்கிறார்கள். சுமார் 400 முதல் 500 வரையிலான விமானங்கள் வந்து செல்கின்றன. டவுன் பஸ் போல் அடிக்கடி விமானங்கள் வந்து செல்லும் இடமாக சென்னை விமான நிலையம் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் 157 பயணிகள் இருந்தனர். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தது.
அப்போது விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதாக எச்சரிக்கை மணி அலாரம் விமானி கேபினில் ஒலித்தது. இதை அறிந்த தலைமை விமானி உடனடியாக சென்று அவசரகால கதவை திறக்கும் பட்டனை அழுத்தியது யார் என்பதை விசாரித்தார். அப்போது, விமானத்தில் பயணம் செய்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. உடனே சிறுவனை கண்டித்த விமான பணிப்பெண்கள், அந்த சிறுவனிடம் விசாரித்த போது சென்னை ஆர்.ஏ.புரத்தில் நண்பர்களுடன் தங்கி இருப்பதாகவும் சொந்த ஊருக்கு தனியாக விமான பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், முதல்முறையாக விமானத்தில் பயணம் மேற்கொள்வதால் அவசர கால கதவை திறப்பதற்காக உள்ள பட்டனை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கரை தெரியாமல் கிழித்துவிட்டதாக கூறினார். இதையடுத்து சிறுவனை விமானத்தில் இருந்து உடனடியாக கீழே இறக்கி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சிறுவனை எச்சரித்த போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் முறையாக விமானத்தில் செல்வோர். குறிப்பாக ஜன்னல் பகுதியை ஒட்டிய சீட்டில் பயணம் செய்வோர், எதையும் நோண்டாமல், குறிப்பாக எமர்ஜென்சி கதவு அருகில் அமருகிறவர்கள், தேவையின்றி எதையாவது செய்தால், அவர்கள் விமான பயணம் ரத்து செய்யப்படுவதுடன், கைதும் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கையை வைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் விமான பயணிகள்.












Click it and Unblock the Notifications