அழகு நிலையம் என்றாலே விபச்சார இடம் என்றுதான் நினைப்பீர்களா.. போலீசாருக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுக்க ஆங்காங்கு, அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் மையங்கள் போன்றவற்றில் காவல்துறையினர் சோதனை நடத்துவதும், அங்கு விபசாரம் நடப்பதாக கூறி வழக்குகள் பதிவு செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் அழகு நிலையங்கள் அல்லது மசாஜ் மையங்கள் என்று சொன்னாலே பாலியல் கூடங்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் கூட வருமளவுக்கு அவ்வப்போது ரெய்டுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்படியான ஒரு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதுபற்றிய விபரம்:

காவல்துறையினருக்கு எதிராக வழக்கு
வில்லோஸ் என்ற ஸ்பாவின் உரிமையாளர் ஹேமாஜூவானி தாக்கல் செய்திருந்த மனுவில்,சென்னையில் பல இடங்களில் தங்களுக்கு மசாஜுடன் கூடிய அழகு நிலையங்கள் உள்ளதாகவும், அவற்றில் அடிக்கடி காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் ,புகார் மற்றும் ஆதாரம் இல்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல்
இந்தநிலையில் தங்களது தாம்பரம் கிளையில், விபச்சாரம் நடைபெறுவதாக பொய் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், பணம் கேட்டு காவல்துறையினர் மிரட்டுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

போலீஸ் கேட்ட மன்னிப்பு
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தாம்பரம் காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி இந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

அதிகார துஷ்பிரயோகம்
காவல்துறையினர் மசாஜ் நிலையங்களை விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பதாகவும், தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

சட்டப்படி நடவடிக்கை
மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டும் நோக்கில் செயல்பட கூடாது என அறிவுறுத்தி விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications