எப்ஐஆர் மட்டும் போட்ருந்தால் பாஸ்போர்ட் வழங்க தடையில்லை! முக்கிய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை : முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷேக் அப்துல்லாவின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால், இந்தியா திரும்புவதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என ஷேக் அப்துல்லா மலேசியாவில் இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார்.

பாஸ்போர்ட் வழக்கு
ஆனால் அவர் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் திருச்சியில் இருந்த போது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாககூறி அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகவும் தமக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிடக்கோரியும் ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முதல் தகவல் அறிக்கை தாக்கல்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அதிரடி உத்தரவு
வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் உத்தரவு தேவை எனவும் அதுவும் இந்தியாவை விட்டு செல்ல வேண்டிய நிலையிருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் கோரினால் நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
தமக்கு பாஸ்போர்ட் கோரி மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் மீண்டும் விண்ணப்பிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுமெனவும் இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி முதல் தகவல் அறிக்கை இருந்தாலே பாஸ்போர்ட் வழங்குவதில் சிக்கல் இருக்கும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications