அடுத்த அலர்ட் வங்கக் கடலில் நாளை உருவாகுகிறது புது காற்றழுத்த தாழ்வு பகுதி! எங்கெங்கு எல்லாம் கனமழை?
சென்னை: அந்தமான் அருகே வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்று நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது . தொடர்ந்து ஐந்து நாட்களாக சென்னை மற்றும் வடக்கு மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சென்னை அருகே கரையைக் கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது என்று இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
ஏற்கனவே பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் இன்னும் கூட வடியாத நிலையில் வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை
இது தொடர்பாக இன்று 12:30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 24 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுருளக்கோட்டில், அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரம்
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழையும் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் மழை
13ம் தேதி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கன மழையும் பிற மாவட்டங்களில் மற்றும் புதுவை காரைக்கால் பொது இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மழை
சென்னை நகரைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும் நாளையும் கேரளக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் . அது நகர்வது நகரும் வேகம், நகரும் திசை ஆகியவற்றைப் பொருத்து தமிழகத்துக்கு மழை வருமா என்பதை தெரிவிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications