எங்க கஷ்டம் கேட்டிருச்சு.. தமிழ்நாட்டிற்கே கனவு சார்.. சென்னை டூ திருச்சி சாலைக்கு பிறந்த விடிவு
சென்னை: தாம்பரம் தொடங்கி, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் மற்றும் திருச்சி வரை சாலையில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி வரப்போகிறது. நான்கு வழிச்சாலையாக உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மிகவும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்றால், அது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைதான். தற்போது உள்ள சூழலில் 80 சதவீத சென்னை வாகனங்கள் இந்த சாலையில் தான் வருகின்றன. சாதாரண நாட்களிலேயே இந்த சாலையில் நெரிசல் மிக அதிகமாக இருக்கும். வார இறுதிகள், விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள், தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல், தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம் உள்பட பல்வேறு பண்டிகை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். சேலம் கோவை மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் சென்னை திருச்சி நான்கு வழிச்சாலையில் பயணிப்பதுதான் நெரிசலுக்கு காரணமாக உள்ளது.

சென்னை திருச்சி நான்கு வழிச்சாலை பார்ப்பதற்கு இருவழிச்சாலை போவே இருக்கும். செங்கல்பட்டை கடந்துவிட்டால் ஒரே நேரத்தில் இரண்டு வாகங்கள் தான் சாலையில் செல்ல முடியும். மறுமுனையிலும் இதுதான் நிலைமை. இதனால் மெதுவாக செல்லும் லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. திடீரென வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கவும், தற்போதுள்ள நான்குவழி சாலையை, பசுமை வழி விரைவுச்சாலை ('கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே') எனப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான 'நகாய்' திட்டமிட்டிருக்கிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை- திருச்சி வரை 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை வரையில் 8 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.. இதனுடன், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் பிற சாலை சேவைகளும் அங்கு வரப்போகிறது... இந்த திட்டம் நிறைவேறும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்து மேம்பபடும் என்றும், வணிகமும் மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
இந்த எட்டுவழிச்சாலை எங்கு தொடங்குகிறது என்றால், சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தொடங்குகிறது. ரூ.26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்தப்பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்களை சேகரித்து வரும் நெடுஞ்சாலை அதிகாரிகள், திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். அரசின் அனுமதியை பெற்று விரைவில் கட்டுமானப்பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளார்கள்.
இந்த விரைவு சாலை தமிழ்நாட்டின் திருச்சி வரை பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாகும். இதன் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும் போது, சென்னை- திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூர பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னை - சேலம் அதிவிரைவு சாலை முதலில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதன்பின்னரே சென்னை- திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சென்னை-பெங்களூரு பசுமை அதிவிரைவு சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த சாலையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது.












Click it and Unblock the Notifications