கட்டுவிரியன் இரவு வேட்டை.. கேரளாவில் 3 பேரின் உயிரை பறித்த எமன்! பினராயி விஜயன் தந்த அவசர எச்சரிக்கை
சென்னை: கேரள மாநிலம் முழுவதும் பாம்பு கடித்து, 2 குழந்தைகள் உட்பட 3 பேர் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 2 பேர் சின்ன குழந்தைகள் என்பதால், இந்தத் துயரம் மேலும் மனதை நொறுக்குவதாக அமைந்துள்ளது என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரத்யேக பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் நிகழ்ந்த அடுத்தடுத்த பாம்புக்கடி சம்பவங்கள் மாநிலத்தையே உலுக்கிவிட்டன. குறிப்பாக, இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் பாம்புக்கடியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
ஆலப்புழா மாவட்டம் வைச்யம்பாகத்தில் 65 வயது முதியவர் தனது வீட்டின் வெளிப்புறக் கழிவறைக்குச் சென்றபோது நாகப்பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்..

கட்டுவிரியன் பாம்பு
அதே மாவட்டத்தில் காயங்குளத்தைச் சேர்ந்த பெண்மணி திருமண நிகழ்வு முடிந்து காரில் ஏற முயன்றபோது எதிர்பாராத விதமாக கட்டுவிரியன் பாம்பு கடித்து மரணமடைந்தார்.. மேலும் திருவனந்தபுரத்தில் 8 வயது சிறுவன் ஒருவன் பாம்பு கடியால் பலியானான்.. இப்படி ஒரே வாரத்தில் கேரளாவில் மூன்று வெவ்வேறு உயிரிழப்புகள் அம்மாநில மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது.
இந்த உயிரிழப்புகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர், இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தவிர்க்க பொதுமக்களுக்குச் சில முக்கிய அறிவுறுத்தல்களை முகநூல் வாயிலாக வழங்கியுள்ளார்.
பினராயி விஜயன் பதிவு
அந்த பதிவில், :தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக, பாம்புகள் தங்களின் வாழிடங்களான பொந்துகள் மற்றும் புதர்களில் இருந்து வெளியேறி குளிர்ந்த இடங்களைத் தேடி வருகின்றன. இது போன்ற காலங்களில் பாம்புகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பொதுமக்கள் வழக்கத்தை விட கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்க முதன்மையான வழி, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருப்பதாகும்.. புதர்கள் மண்டி இருப்பதையோ அல்லது தேவையற்ற கழிவுகள் குவிந்து கிடப்பதையோ தவிர்க்க வேண்டும்.
இரவு நேரம் வேட்டை - மீந்து போன உணவு
மீந்துபோன உணவுப் பொருட்கள் எலிகளை ஈர்க்கும்.. எலிகள் இருக்கும் இடத்திற்குப் பாம்புகளும் வரும். செல்லப் பறவைகளை வளர்ப்பதும் பாம்புகளை ஈர்க்கக்கூடும். இத்தகைய சூழல்களைத் தவிர்ப்பதே சிறந்தது.
குப்பை மற்றும் கழிவுகள் பாம்புகளுக்கு விருப்பமான இரையான எலிகளைக் கவரும். எலிகள் அதிகம் உள்ள இடங்களைத் தேடி பாம்புகள் வருவது இயல்பானது என்பதால், எலிகள் பெருகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
குழந்தைகளைக் கவனமாகக் கண்காணியுங்கள்: தற்போது விடுமுறைக் காலம் என்பதால், குழந்தைகள் வயல்களிலும் மைதானங்களிலும் வெளியே விளையாடுவார்கள். பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பாம்புகள் நுழைவதை தவிர்க்கலாம்
மேலும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும், புல்வெளிகள் அல்லது செடி கொடிகள் நிறைந்த பகுதிகளில் செல்லும்போது காலணிகளை அணிவது பாதுகாப்பானது, குறிப்பாக, குழந்தைகள் விளையாடும் போது அவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சரியாக மூடி வைப்பதன் மூலம் பாம்புகள் உள்ளே நுழைவதைத் தவிர்க்கலாம்.
பாம்புக்கடி ஏற்பட்டால் பதற்றமடையாமல், உடனடியாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உயிரைக் காப்பாற்ற உதவும். மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, அறிவியல் ரீதியான மருத்துவச் சிகிச்சையைப் பெற வேண்டும்.
கேரள வனத்துறை மற்றும் சுகாதாரத் துறை இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது இந்த கோடைக்காலத்தில் அவசியம் என்று பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications