திருப்பத்தூர்.. பெரிய கருப்பனுக்கு கண்ணை கட்ட வைத்த தேர்தல் ஆணைய வாதம்.. இன்று இருக்கு ட்விஸ்ட்
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். இந்த தொகுதியின் தபால் வாக்குகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியது தொடர்பாக பெரியகருப்பன் கொடுத்த புகாருக்கு பதில் அளிக்காதது ஏன்? என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஆனால் இந்த வழக்கில்தேர்தல் ஆணையம் வைத்த வாதம் பெரியகருப்பனுக்கு சவாலானதாக இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்234 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஒரு ஓட்டில் வெற்றி தோல்வி மாறி உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளையும், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். இதனால் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் அவசர வழக்கு தொடர்ந்தார்.

பெரிய கருப்பன் தனது மனுவில் கூறுகையில், "சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான ஒரு தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த வாக்கை மீட்டு, என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்சில் விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, "சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கு அந்த வாக்கை, அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்திருக்கிறார். அந்த வாக்கை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பார். குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்" என்று முகுல் ரோத்தகி வாதிட்டார்.
உடனே நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அமர்வு, "இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏதேனும் விதிகள் வகுத்துள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மூத்த வக்கீல், "இதுசம்பந்தமாக எந்த நடைமுறையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை. தவறான முகவரிக்கு செல்லும் கடிதம் கண்டு பிடிக்கும்போது, சரியான முகவரிக்குத்தானே அனுப்பி வைக்க வேண்டும். அதுபோல இந்த வாக்கை சரியான தொகுதிக்கு அனுப்ப உத்தரவிடவேண்டும்" என்று கூறினார்
தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, "இந்த விவகாரம் தொடர்பாக பெரியகருப்பன் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது. இதில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டால், அவரை கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால், மக்கள் உரிமை பாதிக்கப்படும்" என்று கூறினார்.
இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.தருண், "இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம், துணை தாசில்தார் அந்தஸ்து அதிகாரியை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளை பெற்று, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் அமர்த்தப்படுவதால் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டால், என்ன செய்ய வேண்டும்? என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்" என்று கூறினார்.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர், "தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திமுக வேட்பாளர் பெரியகருப்பனின் புகாருக்கு பதிலளிக்காதது ஏன்? ஒரு வாக்காக இருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதற்கான காரணங்களை விரிவாக விளக்கி இன்று (திங்கட்கிழமை) தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிப்போம்" என்று கூறினார்கள். இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.














Click it and Unblock the Notifications