காங்கிரசுக்கு புத்துயிர் கொடுத்தது கருணாநிதி! 2004ல் நடந்தது என்ன? பாஜக பிரமுகர் ஆச்சாரி நெகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு அரசியலில் கடந்த 22 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்த கூட்டணி உருவான விதம் மற்றும் 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி' (UPA) என்ற பெயர் உருவான ரகசியப் பின்னணி குறித்து பாஜகவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான நினைவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராக சிபிஐ (CBI) தரப்பில் ஆஜரான மிக முக்கியமான சாட்சி மற்றும் Whistleblower இவராவார்.

அவர் எழுதியுள்ளதாவது: 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பில் தொடங்கிய இந்த நீண்ட நெடிய பயணம், இன்று ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிவிட்டு விடைபெற்றுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா அவர்கள் டெல்லியில் இருந்த ஆசிர்வாதம் ஆச்சாரியைத் தொடர்பு கொண்டு, ஒரு மிக முக்கியமான விவிஐபி (VVIP) சென்னை வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். அந்த நபர் யார் என்று முதலில் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் டாக்டர் மன்மோகன் சிங் என்பது தெரியவந்தது.
வாஜ்பாய் அரசு
அப்போதைய அரசியல் சூழலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு "இந்தியா ஒளிர்கிறது" (India Shining) என்ற கோஷத்துடன் தேர்தலை முன்கூட்டியே சந்திக்கத் தயாராக இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க நாடு முழுவதும் எந்தவொரு பெரிய கட்சியும் முன்வராத சூழலில், கலைஞர் கருணாநிதி மட்டுமே முதல் ஆளாகக் கரம் கொடுத்தார்.
சென்னை சென்ற மன்மோகன் சிங், கலைஞரைச் சந்தித்துப் பேசிய அந்த தருணத்தில்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2004 பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களை இந்தக் கூட்டணி வென்று சாதனை படைத்தது.
சோனியாவிற்கு கருணாநிதி ஆறுதல்
இருப்பினும், மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் காங்கிரஸிடம் அப்போது இல்லை. அந்த இக்கட்டான சூழலில் டெல்லி சென்ற கலைஞர், சோனியா காந்திக்குத் தைரியம் அளித்து, "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார்.
பெயரை பரிந்துரைத்த கருணாநிதி
அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார்.
அமைச்சர் ராஜாவும் அங்கு இருந்த அனைவரும் மிக அழகான பெயர் இது என்று கூறியதும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து UNITED PROGRESSIVE ALLIANCE (U.P.A.) என்று சோனியா காந்தியிடம் கூறினார் தயாநிதி மாறன். அவருக்கு முழு திருப்தி. ஆனந்த கண்ணீர் மல்க தலைவரிடம் நன்றிப் பெருக்கோடு விடைபெற்றார் சோனியா காந்தி.
வாழ்வளித்த திமுக
யாருமே சீந்தக் கூட தயங்கிய நிலையில் தங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த தி.மு.கவை உதறித் தள்ளிவிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூட்டணியை முறித்துள்ளது காங்கிரஸ் கட்சி. "தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் கூடவே இருக்கும்" என்பது என் எண்ணம். இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு சரியானதா? என்று என்னிடம் கேட்டால், அந்தக் கேள்விக்கு பதிலாக ரஜினி அவர்களின் வார்த்தைகளை தான் கடன் வாங்குகிறேன். "காலம் பேசாது ; ஆனால், காத்திருந்து பதில் சொல்லும் ". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
ஆசிர்வாதம் ஆச்சாரி யார்?
இந்த வரலாற்று நினைவுகளைப் பகிர்ந்துள்ள பேராசிரியர் டாக்டர் ஆசிர்வாதம் ஆச்சாரி, ஒரு காலத்தில் இந்திய ரயில்வே பணியில் (IRS) உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். பின்னர் தனது அரசுப் பணியைத் துறந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் டிஜிட்டல் நூலகத்தின் (Digital Library) தேசிய ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். வணிக நிர்வாகத் துறையில் பேராசிரியராகவும், கார்ப்பரேட் கவர்னன்ஸ் பாடத்தில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், ஒரு சிறந்த அரசியல் வியூக வகுப்பாளராகவும், ஊடக விவாதங்களில் முக்கியமான கருத்துக்களை முன்வைப்பவராகவும் உள்ளார். 22 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கூட்டணியின் பிறப்புக்குச் சாட்சியாக இருந்த அவர், இன்று அந்தக் கூட்டணியின் முடிவையும் ஒரு வரலாற்றுப் பதிவாக மாற்றியுள்ளார். இந்த பதிவை திமுகவினர் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறார்கள்.
22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஒரு சிறிய ஃப்ளேஸ்பேக்:
— Prof. (Dr.) Aseervatham Achary (@AseerAchary) May 6, 2026
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர்…
2ஜி வழக்கில் பங்கு
முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் நேர்முக உதவியாளராக (Personal Assistant) பணியாற்றியவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. அமைச்சரின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும், அவரது நிழலாகவும் நீண்ட காலம் பணியாற்றியவர் இவர். 2G ஊழல் புகார்கள் எழுந்தபோது, சிபிஐ (CBI) தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட மிக முக்கியமான சாட்சிகளில் ஒருவராக ஆச்சாரி மாறினார். அமைச்சருக்கும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே இருந்ததாக கூறப்பட்ட தொடர்புகள் மற்றும் கோப்புகள் கையாளப்பட்ட விதம் குறித்து இவர் அளித்த வாக்குமூலம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீரென ஆ. ராசாவிடம் இருந்து விலகிய ஆச்சாரி, இந்த ஊழல் புகார்களை முன்னின்று நடத்திய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியுடன் நெருக்கமாகச் செயல்படத் தொடங்கினார். சுவாமிக்குத் தேவையான பல "உள்விவரங்களை" ஆச்சாரி வழங்கியதாகக் கூறப்படுகிறது. நீண்ட கால விசாரணைக்குப் பிறகு 2G வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணைகளை வேகப்படுத்தியதிலும், குற்றச்சாட்டுகளை வலுவாக முன்வைத்ததிலும் ஆசீர்வாதம் ஆச்சாரி ஒரு முக்கிய நபராக வரலாற்றில் இடம்பிடித்தார்.












Click it and Unblock the Notifications