ஸ்டாலினே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. சரியாக என்ட்ரியாகும் அமலாக்கத்துறை.. திமுக கூட்டணிக்கே இது புதுசு
சென்னை: திமுகவில் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், எவ வேலு என அமைச்சர்களும், பல்வேறு முக்கிய திமுக நிர்வாகிகளும் அமலாக்கத்துறை வட்டத்தில் சிக்கி உள்ளனர். இதேபோல் திமுக நிர்வாகிகள் பலரும் ரெய்டில் சிக்கி உள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளும் ரெய்டில் சிக்கி வருகிறார்கள்..
இந்நிலையில் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கிய பலர், திமுக கூட்டணிக்கு லோக்சபா தேர்தலில தேர்தல் செலவு செய்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக திமுகவுக்கு தேர்தல் நிதியினை புதிதாக யாரும் நிதி தர தயங்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சி தலைவர்கள் பலர் அமலாக்கத்துறையின் ரெய்டு மற்றும் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.. இந்த நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கியதில் இருந்து தொடங்குகிறது. அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் பணி நியமனம் தொடர்பான பழைய வழக்கு ஒன்றினை குறிப்பிட்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கைது செய்தது.
அடுத்ததாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் வட்டத்தில் சிக்கினார். அவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதேபோல் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது செம்மண் குவாரி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது, அவரும் வழக்கில் சிக்கியுள்ளார்.. இதேபோல் அமைச்சர் எவ வேலு வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை கடந்த ஆண்டு நடத்தியது.. இதேபோல் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது எல்லாம் கடந்த ஓராண்டில் முக்கிய தலைவர்களின் வீடுகளில் நடந்த ரெய்டு ஆகும். இதேபோல திமுக எம்பி ஆ ராசாவுக்கு சொந்தமான சில சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கிறது..
இவை இல்லாமல், சென்னை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் உள்பட பல்வேறு இடங்களில் மணல் குவாரி அதிபர்களை குறிவைத்து அமலாக்கத்துறை கடந்த ஆண்டு இறுதியில் சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் கலெக்டர்களுக்குகே சம்மன் அனுப்பி உள்ளது அமலாக்கத்துறை.. அமைச்சர் எவ வேலு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் சிக்கலை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இது ஒருபுறம் எனில், தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்களை குறிவைத்தும் சோதனை நடந்தது.. இந்த சோதனையில் சில கட்டுமான நிறுவனங்கள் அமலாக்கத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் சிக்கி உள்ளன. இதேபோல் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பார் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது.
இவை எல்லாம் தேர்தல் நெருங்கும் முன்னே நடந்தவை. தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், சென்னையில் இன்று 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகர், முகப்பேர், கொளத்தூர், அண்ணாநகர், திருவான்மியூர், அம்பத்தூர், மயிலாப்பூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவரும், கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அரசியல் கட்சிக்கு நிதி: தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ். இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சோதனைக்குள்ளாகி இருக்கும் தனியார் நிறுவனத்தின் அதிபர் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்துள்ளதாம்.
ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி: இதேபோன்று பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வருகிறார்கள். எஸ் டி கூரியர் நிறுவனத்தை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தான் தலைமை இயக்குனராக இருக்கிறார். நவாஸ் கனியும் நிர்வாக இயக்குனராக உள்ளார். அவருடைய மற்றொரு சகோதரர் சிராஜுதீன் இணை இயக்குனராக இருக்கிறார்கள். கூரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனிக்கு வழங்கப்பட்டிருக்கிறது
விசிக ஆதவ் அர்ஜூன்: கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தார்கள்.. ஆதவ் அர்ஜுன் யார் என்றால், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆவார். தமிழக கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
திமுக கூட்டணி கலக்கம்: திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இதுவரை சோதனை நடத்தி வந்த அமலாக்கத்துறை, திமுக கூட்டணி தலைவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தி வருவது திமுகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடக்கிறதா என்பதை கழுகு கண்களுடன் பார்த்துக்கொண்டிருக்கும் அமலாக்கத்துறை, திமுக கூட்டணிக்கு தேர்தல் செலவு வழங்குவோர் குறி வைத்து சோதனை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கணக்கு முடக்கம்: இதன் காரணமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிக்கு புதிதாக யாரும் நிதி தரவும் தயங்குவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள். இதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கையை பிசைந்தபடி உள்ளன. இவை எல்லாவற்றையும் விட பெரிய விஷயம் காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் நடந்தது. அந்த கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியுமே தேர்தல் செலவுக்கு பணம் இல்லை என்று வெளிப்படையாகவே கையைவிரித்துள்ளது.












Click it and Unblock the Notifications