20 கோடி பேரம்.. தேமுதிக Ex MLA சொன்ன உண்மைகள்! சைக்கிள் கடை நல்லதம்பியை ஞாபகம் இருக்கா?
சென்னை: தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, தன்னை கட்சியிலிருந்து பிரிக்க 20 கோடி விலை பேசினார்கள் என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, கொடுக்கப்பட 40 சீட்டுகளில் தேமுதிக 29 இடங்களில் வென்றது. அதன்பின்னர் சட்டமன்றத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட உரசலை உலகமே அறியும்.

விஜயகாந்த் நாக்கை துருத்தினார். ஜெயலலிதா திராணி இருக்கிறதா? தில் இருக்கிறதா? என்று சவால் விட்டார். அதன்பின்னர் வரிசையாக தேமுதிக உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.
பெரிய சறுக்கலைச் சந்தித்தது தேமுதிக. அப்போது கட்சியினர் செய்த துரோகத்தால்தான் விஜயகாந்த் உடல்நிலை மோசமானது என்று சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த்கூட பேசி இருந்தார்.
இந்நிலையில்தான் நல்லதம்பி இந்த 20 கோடி பேரம் பேசிய விவகாரத்தை யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டில் தெரிவித்திருக்கிறார்.
சாதாரண சைக்கிள் கடை வைத்திருந்த நல்லதம்பியை எழும்பூர் தொகுதியில் நிற்கவைத்து எம்.எல்.ஏ. ஆக்கினார் விஜயகாந்த். அப்போதே இது பெரிய அளவில் பேசு பொருளாக மாறிது.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நல்லதம்பியைச் சட்டமன்ற உறுப்பினராக்கியது விஜயகாந்த்தின் சாதனையாக முன்வைப்பட்டது.
இப்போது அவர் மறைந்த வேளையில் தன் மனதிலிருந்த குமுறல்களைக் கொட்டித் தீர்த்துள்ளார் நல்லதம்பி.
"நாளைக்கு நான் இல்லாமல் போனாலும், எம்.எல்.ஏ குடும்பம் என்று இது என்று சொல்வார்கள். அது என் பரம்பரைக்கே பெரிய அடையாளம்" என்கிறார் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி.
"எனக்கும் பணத் தேவை இருந்தது. அதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு கேட்பனுக்கு துரோகம் செய்துவிட்டுப் போய்விட முடியுமா? கிட்டத்தட்ட 18 எம்.எல்.ஏக்கள் வெளியே போனார்கள்" என்றவர் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த்துக்குள் நேரடியாகச் சட்டசபைக்குள் நடந்த மோதலை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
சட்டசபையில் விஜயகாந்த் ஃபைட்!

"பால்விலை பேருந்துக் கட்டண உயர்வு பற்றி மானியக் கோரிக்கையில் கட்சியின் கொரடா சந்திரகுமார் பேச தொடங்கினார். எதிர்க்கட்சியாக நாங்கள் உள்ளோம். ஏன் ஆலோசிக்காமல் உயர்த்தினீர்கள் என்று கேட்டார். அதற்கு, 'நாங்கள் பால் விலையை உயர்த்துவோம். பஸ் கட்டணத்தை உயர்த்துவோம். நாங்கள் அப்படித்தான் செய்வோம். நீங்கள் இல்லாமல் வரும் தேர்தலைச் சந்தித்தாலும் நாங்கள் ஜெயிப்போம்' என்றார் ஜெயலலிதா.
அப்போது விஜயகாந்த் எழுந்து பேசினார். அதற்கு அதிமுக தரப்பு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தரக்குறைவாகப் பேசினார்கள். அப்போது நாக்கை துருத்தினார். அது உண்மை.
அன்றைக்கு மட்டும் விஜயகாந்த் முன்னால் மேசை இல்லை என்றால், முன்னால் இருந்த மூன்று அமைச்சர்களை இழுத்துப் போட்டு அடித்திருப்பார். கேட்பனுக்கு சினிமாவில் தான் நடிக்கத் தெரியும். நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அன்று அவர் நடித்திருந்தால் அவர் முதலமைச்சர். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை" என்கிறார் நல்லதம்பி.
"அதற்குப் பின்னால் எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு விலை பேசினார்கள். என்னிடம் கூட 20 கோடிக்கு விலை பேசினங்க. நான் போகவில்லையே" என்று பேசும் போது அவரது கண்களில் கண்ணீர் கசிகிறது.
"எங்கள் தலைவர் விஜயகாந்த் மறைந்த பிறகு தேமுதிக ஆபீசில் உடலை வைத்திருந்தோம். அப்படியே அங்கேயே மக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்தால் வந்த கூட்டத்திற்கு எப்படியும் 4 நாள்கள் ஆகி இருக்கும். ஏனென்றால் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம். தீவுத்திடலுக்கு மாற்றியதால்தான் கொஞ்சம் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. இல்லை என்றால், பெரிய நெருக்கடியாக மாறி இருக்கும்.

அந்தளவுக்கு மக்கள் அவரை நேசித்திருக்கிறார்கள். திரும்பு பக்கம் எல்லாம் மக்கள் கண்ணீர் வடிப்பதைப் பார்த்து ஆடிப்போய்விட்டோம். அதில் பல ஆயிரம் மக்கள் எங்கள் கட்சியைச் சேராத பொதுமக்கள். கடைசி வரை கட்டுக்கடங்காமல் அப்படியே நின்றிருந்தார்கள். அது மாபெரும் ஆச்சரியம்.
கடந்த பிறந்தநாளில் அன்று கூட நான் அவரைச் சந்தித்தோம். அவரும் கட்சித் தொண்டர்களைச் சந்தித்தார். அதேபோல கடந்த நியூ இயர் அன்று கூட சந்தித்தோம். நான் போனபோது, 'நல்லதம்பி எப்படி இருக்கீங்க?' என்று கேட்டார். மறக்காமல் அடையாளம் வைத்திருந்தார். அப்போது ஒரு பிரச்சினையும் இல்லை. நன்றாகத்தான் இருந்தார்.
9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் விஜயகாந்த்திற்கு மன்றம் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஓட்டேரியில் பாபு என்று ஒருவர் இருந்தார். அவரைப் போய் பார்த்தேன். அவர் இரண்டு ஆண்டுகள் வரை காக்கவைத்து காலம் கடத்தினார்.
அன்றைக்கு மத்திய சென்னை விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்டச் செயலாள ராக பார்த்தசாரதி இருந்தார். அவரைப் பார்க்கவே 2 வருடங்கள் காத்திருந்தேன். அவர்தான் பொதுச்செயலாளர் ராமு வசந்தனிடம் அனுப்பினார். அவர் மூலம் மன்றத்திற்கு 100/541 பதிவு எண் கிடைத்தது. எழுச்சிக் கலைஞர் விஜயகாந்த் நற்பணி மன்றம் என்று பெயர் வைத்தோம்.
இப்படித்தான் 1987இல் நாங்கள் மன்றம் தொடங்கினோம்.
அதன்பிறகு மக்களுக்கு எங்கள் மன்றம் பல உதவிகளை விஜயகாந்த் செய்தார். ராஜாபாதர் தெருவில் அவர் அலுவலகம் இருந்தது. வாரத்தில் ஒருநாள் மக்கள் குறைகளைக் கேட்டு உதவிகளைச் செய்வார்.
நாங்கள் மீன் கடை வைப்பதற்கு, இட்லிக் கடை வைப்பதற்கு, பூக்கடை வைப்பதற்கு என உதவிக் கேட்டு வரும் மக்களை அழைத்துக்கொண்டு செல்வோம். உடனே அவர்களுக்கு உண்டான உதவிகளைச் செய்யப் பணம் கொடுப்பார்.
நாங்கள் கடைகளிலிருந்து தேவையான சாமான்களை வாங்கி தருவோம்" என்றவர் கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகுத் தன் சொந்த வாழ்க்கை பற்றிப் பேசத் தொடங்கினார்.

சைக்கிள் கடை வைத்து தந்த விஜயகாந்த்:
"சின்ன வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் சில காலங்களில் இறந்துவிட்டார். நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அண்ணன் மூல சைக்கிள் கடைத் தொழிலுக்கு வந்தேன்.
அதன்பிறகு முழுக்க மன்றத்திற்காக உண்மையாக உழைத்தேன். அதைப் பார்த்த கேப்டன், என் அம்மா மறைவுக்குப் பின் 10 சைக்கிள் வாங்கி கொடுத்தார். அதன் மூலம் கொஞ்சம் பெரிய அளவில் சைக்கிள் கடை நடத்தி வந்தேன்.
2001இல் எனக்குத் திருமணம் நடந்தது. அவரே நடத்திவைத்தார். 4 பவுனில் செயின் போட்டார். கையில் பத்தாயிரத்து ஒரு ரூபாய் கையில் கொடுத்தார். என் மனைவிக்கு ஒரு மோதிரம் போட்டார்.
அப்போது நான் திமுக. பத்திரிகையில் ஒரு பக்கம் கலைஞர் படம். இன்னொரு பக்கம் விஜயகாந்த் படம் போட்டேன். கேப்டன் தலைமையில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
2005 செப்டம்பர் 14 அன்று மதுரை தோப்பூர் திருநகரில் கட்சி ஆரம்பித்தார் விஜயகாந்த். கூட்டத்திற்கு 25 லட்சம் ரசிகர்கள் வந்தார்கள். அடுத்து 2006இல் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார்.
எம்.எல்.ஏ. சீட்டு தந்த அதிர்ச்சி:
அப்போது பூங்கா நகர் உட்பட 4 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நிற்க நான் மனு கொடுத்தேன். அப்போது போட்டி அதிகம். ஆகவே நான் விட்டுக் கொடுத்துவிட்டேன்.
மீண்டும் 2011 தேர்தல். என் தொகுதிக்குச் சீட்டு கேட்டு பணம் கட்டினேன். கூடவே அண்ணாநகரில் விஜயகாந்த் நிற்கவேண்டும் என்று பணம் கட்டினேன். அடுத்த சில நாள்களில் அதிமுக கூட்டணி உறுதியானது. 41 சீட்டுகள் கொடுத்தார்கள். போட்டி மிகக் கடுமையாக இருந்தது. சீட்டு கிடைத்தால் நிற்போம். இல்லையென்றால் கட்சி பணி பார்ப்போம் என்று நினைத்திருந்தேன்.

ஒருநாள் கட்சி அலுவலகத்தில் வந்த தபால்களை எல்லாம் அடுக்கிவைத்து அங்கேயே உட்கார்ந்து விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். டிவியில் எழும்பூர் தொகுதியில் கழக இளைஞரணி துணைச் செயலாளர் நல்லதம்பி நிற்பார் என்று திடீரென்று வந்தது. எனக்கே அதிர்ச்சி.
எனக்கே பயம். அதுவரை அதிமுக என் தொகுதியில் வென்றதே இல்லை. ஆகவே அங்கு வென்று அதிமுகவுக்கே நாம் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தரவேண்டும் என்றார் கேப்டன். ஒரு பெரும்புள்ளியை எதிர்த்து வென்றேன்" என்கிறார்












Click it and Unblock the Notifications