மாம்பழமாம் மாம்பழம்..சேலத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு! ஆர்டர் போட்ட விஜய்..களத்தில் ஆனந்த்
சென்னை: நடிப்பிற்கு ஓய்வு கொடுத்து விட்டு விரைவில் அரசியலில் ஐக்கியமாக இருக்கிறார் நடிகர் விஜய். அவரது முதல் அரசியல் மாநாடு சேலத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆன புஸ்ஸி ஆனந்த். 10 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போதைக்கு நம்பர்-1 நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் விஜய் அரசியல் வருகைக்கு முன்னதாக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சி தொடங்கப் போவதை சூசகமாக அறிவித்தார்.

அரசியலுக்கு ஏனோதானோ என்று வரக்கூடாது என தீர்க்கமாக இருந்த விஜய் தான் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வந்தார்.
மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் என மெதுவாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது. பனையூரில் அடிக்கடி ஆலோசனை மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து திட்டமிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் ஒரு வழியாக கட்சி பெயரையும் அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். இப்போது கோட் படத்தின் போஸ்ட் ப்ரெட்க்சன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் முடிவடைந்த பின்னர் தான் அவரது முழு அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின் படி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியது, நீட் தேர்வு தொடர்பான பேச்சும் தான் அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தது. ட்விட்டர் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்களை தவிர்த்து விட்டு ஆக்கபூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிலையில் பிரம்மாண்டமாக மண்டல மாநாடுகள், சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் என அடுத்தடுத்து பல அரசியல் அதிரடிகளை அரங்கேற்ற விஜய் தரப்பு திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் மதுரை அல்லது திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேலத்தில் முதல் மாநில மாநாட்டை விஜய் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் சேலம் வந்திருந்தார். இந்ந்த நிலையில் சேலம் அருகே இருக்கும் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ளூர் நிர்வாகிகளுடன் அவர் மைதானங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதன் மூலம் சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் உறுதியாகி உள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு அதாவது நவம்பர் மாதத்தில் விஜய்யின் முதல் மாநில மாநாடு இருக்கும் எனவும் இதில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜயின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications