மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு.. அதிகாலையே வந்த பணம்.. பலருக்கு சர்ப்ரைஸ்.. எப்போ விரிவாக்கம்?
சென்னை: கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள பயணிகளுக்கு இந்த மாதத்திற்கான தொகை இன்று அனுப்பப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கள ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கலைஞர் உரிமைத்தொகை திட்டம்
முதல் கட்ட பயனாளிகள் சேர்க்கையின்போதும், திட்ட விரிவாக்கத்தின்போதும் கள ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதேபோல, இந்த முறையும் பயனாளிகளின் விவரங்கள், முகவரி, வங்கித் தகவல்கள் போன்றவற்றைச் சரிபார்க்கும் ஆய்வுகள் நடத்தப்படும். இதன் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பரிசீலனை செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான முதல் பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 15 ஆம் தேதி, தீபாவளிப் பரிசாக முதல் கட்டப் பயனாளிகளுக்குப் பணம் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள்
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைந்தன. முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் பதில்கள் கிடைத்திருக்க வேண்டும். எனினும், அவர்களுக்கான பதில்கள் இன்னும் அனுப்பப்படவில்லை. அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாகவே அவர்கள் பதில்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் தங்கள் மனுவின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்திய தகவல்களின்படி, மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் அறிக்கையின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் சுமார் 25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் திட்ட நிதி உதவி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீதான செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அடுத்த 45 நாட்களுக்குள் இம் மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் பங்கேற்றார்.
மகளிர் உரிமை தொகை எப்போது?
விழாவில், 17 துறைகளைச் சேர்ந்த 4997 பயனாளிகளுக்கு ₹253 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், 3846 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதுடன், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களும் திறக்கப்பட்டன. புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை; அதிமுகவின் அடையாளம் அடிமைத்தனம்; ஆனால், திமுக அரசுதான் சமூக நீதிக்கான அரசு" என்று குறிப்பிட்டார்.
திமுக அரசின் முக்கியத் திட்டங்களான மகளிர் உரிமைத் திட்டம், மகளிருக்கு மகப்பேறு நிதி உதவித் திட்டம், மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். மகளிர் உரிமைத் திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, கலைஞர் உரிமைத் திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications