ஃபார்முலா 4 ரேஸ் நடக்குமா? பஞ்சாயத்தை ஆரம்பித்த பாஜக! கோர்ட்டுக்கு போன கோரிக்கை.. நாளை விசாரணை!
சென்னை: வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் அண்ணா சாலையில் பார்முலா நான்கு கார் பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடை கோரி பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை நாளை நடக்கும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
சென்னையில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது.

முன்னதாக டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையே கார்பந்தயத்தை சென்னை நகருக்குள் நடத்த தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் தனியார் நிறுவனம் நடத்தும் இந்த பந்தயத்தால் தமிழ்நாடு அரசுக்கு எந்த நன்மையும் கிடைக்காது எனவும், ஆனால் தமிழக அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பந்தயம் நடக்கும் பகுதியில் அரசு மருத்துவமனை இருப்பதால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதோடு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் என மனுவில் கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் கடுமையான புயல் மழை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு கூறியது. மேலும் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயத்தை ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்து கூட தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் அண்ணா சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்தொடல் வரை இந்த பந்தயம் நடக்கவுள்ளது இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயதுக்கு தடை கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில்,"அண்ணா சாலை, நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள சாலையில் இந்த கார் பந்தயத்தை நடத்துவது என்பது மோட்டார் வாகன விதிகளுக்கும் முரணானது. அனைத்து வசதிகளும் நிறைந்த இருங்காட்டுக்கோட்டையில் இந்த கார் பந்தயத்தை நடத்தினால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாமல் அமைச்சர் உதயநிதி கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே, சென்னையில் இந்த கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்" என கூறியதோடு, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்தால், இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்றைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications