என்எல்சி! நெல்லுக்கு பதில் தக்காளி இருந்திருந்தால்.. பாலுவுக்கு நீதிபதி பதில்.. ஹைகோர்டில் சிரிப்பலை
சென்னை: என்எல்சி நிறுவனம் வளையமாதேவியில் சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் இன்று விசாரணை நடந்த போது, "நெல்லுக்குப் பதிலாக தக்காளி பயிரிட்டிருந்தால், கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்" என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு கூறினார். இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியின் போது, பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி, அறுவடை வரை விவசாயிகளை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரியும்; நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நேற்று முன் தினம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கான இழப்பீடு குறித்து தமிழக அரசும், என்.எல்.சி. தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
என்.எல்.சி. மற்றும் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எ.எல்.சுந்தரேசன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யும் வரை தொந்தரவு செய்யப் போவதில்லை எனவும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும், சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும், நெற்பயிர் சேதப்படுத்தப்பட்டதால் 88 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 53 பேருக்கான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு தாசில்தாரரிடம் இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் என்.எல்.சி. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, நிலம் கையகப்படுத்தும் போது வழங்குவதாக கூறிய இழப்பீடான ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாயை முழுமையாக வழங்காமல் பயிர்களை சேதம் செய்துள்ளதாகவும், தற்போது சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல எனவும், ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முன்னாள் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதால் தொடர்ந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்தது அத்துமீறல் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்காமல் இத்தனை ஆண்டுகள் விவசாயம் செய்ய அனுமதித்து என்.எல்.சி. நிர்வாகமும் தவறி விட்டதாகவும் தெரிவித்த நீதிபதி, சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.
இத்தொகையை ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும், செப்ட்ச்ம்பர் 15ம் தேதிக்கு பின் நிலத்தில் எந்த விவசாய பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்.எல்.சி. பாதுகாக்க வேண்டும் என்றும், நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தினால் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையே இந்த உத்தரவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் பிறப்பித்துக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு, "அந்த நிலத்தில் நெல்லுக்குப் பதிலாக தக்காளி பயிரிட்டிருந்தால், கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் , "தக்காளி பயிரிட்டிருந்தால், அரசே அதை கொள்முதல் செய்திருக்கும்" என்று தெரிவித்தார். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "தக்காளிக்குப் பதில் மாம்பழம் பயிரிட்டிருக்க வேண்டும்" என்று கூறினார். இந்த விவாதம் நீதிமன்ற அறையில், சிரிப்பலை ஏற்பட்டது












Click it and Unblock the Notifications