பக்கா ஸ்கெட்ச்.. சாலையில் சென்ற தந்தை.. கூலிப்படையை வைத்து கொலை செய்த மகன்.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை : சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டில் சொத்தில் பங்கு கொடுக்காத தந்தையை மகனே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது
கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் சொத்தில் பங்கு கொடுக்காத தந்தை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி.

சென்னையில் அதிர்ச்சி
இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரி என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். உமாபதியின் மனைவி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகள் லோகேஸ்வரிக்கு இரண்டு குழந்தைகளும், சரவணனுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும் லோகேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்டார். இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

சொத்து தகராறு
உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்தில் ஒரு வீடும், காயரம்பேடு பகுதியில் ஒரு வீடும் உள்ளன. அதில் ஒரு வீட்டை சரவணனுக்கும், மற்றொரு வீட்டை லோகேஸ்வரிக்கு பிறந்த மகன் பரமேஸ்வரனுக்கும் உமாபதி எழுதி வைத்துவிட்டார். இதில் இரண்டு வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி சரவணன் கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

கொடூர கொலை
இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் உமாபதி தனது பைக்கில் காயரம்பேடு பகுதியில் இருந்து கன்னிவாக்கம் பகுதிக்கு வழக்கம்போல் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் கன்னிவாக்கம் அரசு பள்ளி அருகில் உமாபதியை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications