அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்:-ஓபிஎஸ் தரப்பு மனு டிஸ்மிஸ்-ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை என்றும் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை கடந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்பி உதயகுமார், கே.பி.முனுசாமி உள்பட அதிமுகவின் பலரும் எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக மாற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11-தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. ஓ பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்பட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

பொதுச்செயலாளர்
இந்நிலையில் கட்சியின் தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே கடந்த 17-ந் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வழக்கு
இதற்கிடையே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர்.

விசாரணை
இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விசாரித்தார். அப்போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டார். மீண்டும் இந்த வழக்கை கடந்த 22-ந் தேதியும் (தெலுங்கு வருட பிறப்பு விடுமுறை தினத்தன்றும்) நீதிபதி கே.குமரேஷ்பாபு விசாரணை நடத்தினார்.

பதிவுத்துறை
அப்போது, இருதரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டி.குமரேஷ்பாபு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 22-ந் தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதி பிறப்பிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை நேற்று வெளியிட்டிருந்தது.

நீதிமன்றம் தீர்ப்பு என்ன
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை என்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்துள்ளார். பொதுச்செயலாளர் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகப்போவது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications