ரயில்வே துறை பணியாளர்களின் அலட்சியமே விபத்துக்கு முக்கிய காரணம்.. தமிழக பாஜக கருத்து
சென்னை: நேற்றிரவு நடைபெற்ற ரயில் விபத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக கூறினாலும் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அலட்சியமே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை அடுத்தடுத்து மோதிக்கொண்டதே மிக மோசமான விபத்துக்கு காரணம்.
விபத்து எப்படி நடந்தது? கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. சுமார் மாலை 6.30 மணி அளவில் பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தார்கள்.
அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் மின்னல் வேகத்தில் வந்துள்ளது. இதுவே கொடூரமான விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில், "நேற்றிரவு நடைபெற்ற ரயில் விபத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக கூறினாலும் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அலட்சியமே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டேயிருந்தாலும் மறு புறம் மனித அலட்சியம் அதை தோல்வியடைய செய்கிறது. காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.நடந்துள்ளது வரலாற்று சோகம்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications