சீமானின் இந்த உளவியலுக்கு பெயர் தான் சனாதனம்.. விசிக வன்னியரசு போட்ட பதிவு..நாதகவினர் கடும் கோபம்
சென்னை: சீமான் பேச்சு குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள விசிக வன்னியரசு, சீமானிடம் இருப்பது ஆணாதிக்க உளவியல். இந்த உளவியலுக்கு பெயர் தான் சனாதனம். சனாதனம் அழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
சீமான் தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழியுடன் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக ஆஜரானார். சீமானிடம் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2 பெண்களால் நான்தான் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டேன். 13 ஆண்டுகளாக வழக்கு போட்டு என்னை வன்கொடுமை செய்தனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது .

பெண் வன்கொடுமை பேசும்போது, ஆண் வன் கொடுமையும் பேசனும் அல்லவா? நான், என் குடும்பம் சார்ந்த உறவுகள், என்னை சார்ந்த லட்சக்கணக்கான உறவுகள், உலகம் முழுவதும் இருக்கும் என் உறவுகள் என எங்களைப்படுத்திய வன்கொடுமையை? யார் யாரை சொல்வது என இருக்கிறது இல்லையா?
விஜயலட்சுமியிடம் விசாரணை, ரகசியமாக நீதிமன்றத்துக்கு அழைத்து போகிறார்கள், மருத்துவ பரிசோதனை என பாட்ஷா பட பில்டப்பை விட ஓவராக இருக்கிறது. 2 பெண்கள் சேர்ந்து ஒருத்தனை வன்கொடுமை செய்வதை விட வேறு வன்கொடுமை இந்த சமூகத்தில் இருக்கிறதா? கோடி மக்களால் நேசிக்கப்படுகிற ஒரு மகனை நிறுத்தி வாய்க்கு வந்ததை எல்லாம் குற்றச்சாட்டு என சொல்ல, அதை ஊடகங்களும் போட ரசிப்பதை என்னவென்று சொல்வது? இந்த சமூகம் முன்பு நான் அவமானப்படுவது, அசிங்கப்படுவதை ரசிப்பது வன்கொடுமை இல்லையா?
என் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்கனும். 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பதெல்லாம் என்ன நகைச்சுவை? நான் திருட்டுத்தனமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதற்கு ஒரு ரசீது கொடுத்திருப்பாங்கதானே? அது எங்கே? 2013-ல் திருமணம் நடந்த போது அந்த ரசீதை தந்திருக்கலாமே?
மவுனமாக இருக்கும் போது அதிகப்படியான பொய்கள் பேசப்படுகிறது என்கிறான். என்னுடைய மவுனத்தால் அதிகமாக பேசிவிட்டீர்கள். நான் ஆகப் பெரும் ஜனநாயகவாதி என்பதால் அதிகம் பேசினீர்கள். என் தம்பிகளை நான் பலியிடக் கூடாது என நினைத்ததால் வந்த பிரச்சனை. இனி எவனும் வேண்டாம்.. நானே வருவேன்.. நீ பேசு.. அதனால்தான் விஜயலட்சுமி, வீரலட்சுமியுடன் ஒரு சேர விசாரிக்கவும் சொன்னேன்.
வீரலட்சுமி, முக்தார் போன்றவர்களுக்கு என் வாழ்க்கையில் மன்னிப்பு கிடையாது. நீங்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது உரிய சான்றுகளைத் தர வேண்டும் என சீமான் கூறினார்.
அப்போது அவருடைய மனைவி கயல்விழியிடம் செய்தியாளர்கள் மனஉளைச்சலா என கேட்ட போது, எனக்கு மனஉளைச்சல் எல்லாம் இல்லை. எனக்கு பலர் போன் செய்து ஆறுதல் சொல்லும் போதெல்லாம் எதுக்கு சொல்றாங்கன்னுத்தான் தோன்றும். அவரே மலை போல் நிற்கும் போது எனக்கு என்ன கவலை? என கயல்விழி கேள்வி எழுப்பினார். அப்போது சீமான், என் மனைவி இந்த விவகாரத்தில் கோபப்பட்டு என் குரல் வளையை நெரித்து, இவ்வளவு பெண்கள் உள்ள கொல்லையில் உனக்கு பழகுவதற்கு வேறு பொண்ணே கிடைக்கலையா என கேட்டார் என சீமான் தெரிவித்தார்.
இதனிடையே விசிகவைச் சேர்ந்த வன்னியரசு தனது ட்விட்டரில் சீமான் குறித்து கூறுகையில், "சேலம்- ஓமலூரைச்சார்ந்த கோகுல்ராஜ் படுகொலையை யாரும் மறந்திட முடியாது. 2016 ஆம் ஆண்டில் காதலித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடக்கத்திலிருந்தே யுவராஜ் பெயர் அடிபட்டது.
பின்பு கொலைக்கான ஞாயத்தை தினமும் வாட்சப்பில் பேசி வந்தான்.கோகுல்ராஜ் கொலைக்கு யுவராஜ் தான் காரணம் என
போலீசார் ஆவணங்களுடன் வழக்குப்பதிவு செய்தனர். பல சம்மன் அனுப்பிய பிறகு திருச்செங்கோடு சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானான் அந்த கொலையாளி.
அப்போது ஆஜரான விதம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.கொலை செய்ததை கூட பெருமையாக அறிவித்து இளைஞர்கள் படை சூழ வந்தான் யுவராஜ். இந்த உளவியலுக்குப் பின்னால் இருப்பது சாதி ஆதிக்க உளவியல் தான்.அதாவது,நாம் ஆண்ட சாதி.கொல்லப்பட்டவன் ஒரு அடிமை சாதி எனும் உளவியல் தான்.
அதனால் தான்,கோகுல்ராஜ் படுகொலையை ஞாயப்படுத்தியும் ஏளனப்படுத்தியும் யுவராஜால் பேச முடிந்தது. இளைஞர்களை சாதி எனும் போதையால் தவறாகவும் வழிநடத்த முடிந்தது. அதே நிலை தான் நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் இன்று காவல் நிலையத்தில் ஆஜரான விதம். இரண்டுமே ஆதிக்க உளவியல் தான். கொலையாளி யுவராஜிடம் இருந்தது சாதி ஆதிக்க உளவியல்.சீமானிடம் இருப்பது ஆணாதிக்க உளவியல்.இந்த உளவியலுக்கு பெயர் தான் சனாதனம்.சனாதனம் அழிக்கப்பட வேண்டும். " என்று வன்னியரசு கூறியுள்ளார்.
இதனிடையே வன்னியரசின் பதிவிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். வன்னியரசுவின் பதிவினை விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications