டாக்டர்களே உஷார்.. இந்த உத்தரவை மீறினால் லைசென்ஸே கேன்ஸலாகிவிடும்! எச்சரித்த மருத்துவ கவுன்சில்
சென்னை: மருந்து நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையேயான தொடர்பு அத்துமீறுவதை தடுக்க அவ்வப்போது தேசிய மருத்துவ கவுன்சில் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றையும் விதித்திருக்கிறது. இதை மீறினால் டாக்டர் லைசென்ஸே ரத்தாகிவிடும் என்று எச்சரித்துள்ளது.
நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் நமது கைகளுக்கு வந்து சேர்வதற்கு பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. தலைவலி, காய்ச்சல், உடல்வலி, சர்க்கரை நோய், இதயநோய், குழந்தைகளுக்கான சில பிரச்னைகளுக்கு தயாரிக்கப்படும் மருந்துகள் எல்லாமும் நோயை குணப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இதனை தயாரிக்கும் நிறுவனங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்களது மருந்துகளை விற்பனை செய்ய மெடிக்கல் ரெப் எனப்படும் மருந்து விற்பனை பிரிதிநிதிகளை பயன்படுத்துகின்றன.

இவர்கள் ஒவ்வொரு கிளினிக்களுக்கு சென்று மருத்துவர்களை நேரில் சந்தித்து தங்கள் நிறுவனத்தின் மருந்துகளின் தனித்துவத்தை எடுத்துக்கூறி விற்பனை செய்வார்கள். மருந்தின் தனித்துவம் தங்கள் நோயாளிகளுக்கு பொருந்தும் எனில் மருத்துவர்கள் அதனை பரிந்துரைப்பார்கள். இதுதான் பொதுவான நடைமுறை. ஆனால், இதில் சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து அவர்களை தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்க வைப்பதாக புகார்கள் அவ்வப்போது எழுகின்றன.
குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் டோலோ 650 மாத்திரைதான் அதிகம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையாகும். இப்படி மருத்துவர்கள் பரிந்துரைக்க, அவர்களுக்கு ரூ.1,000 கோடி வரை இந்த மாத்திரையை உற்பத்தி செய்த மருந்து நிறுவனங்கள் பரிசு பொருட்களை கொடுத்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர்தான் இந்த துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த தகவல்கள் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தன. இதனையடுத்து தேசிய மருத்துவ கவுன்சில், மருத்துவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது.

அதாவது இனி மருந்து நிறுவனங்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், வணிக சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சாதன நிறுவனங்களிடமிருந்து எந்த வித பரிசு பொருட்களையும், டிராவல் டிக்கெட்களையும், பார்டி அழைப்புகளையும் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளது. இது ஒரு லஞ்சம் பெறும் செயல்பாடு என்றும் எனவே இதனை மருத்துவர் மட்டுமல்ல மருத்துவர் சார்ந்துள்ள குடும்பத்தினர் எவரும் இதனை ஏற்கக்கூடாது என்று தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.
தற்போது அதனைத் தொடர்ந்து மற்றொரு உத்தரவும் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, மருந்து நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் மருத்துவர்கள் பங்கேற்கக்கூடாது. மீறினால் மூன்று மாத காலத்திற்கு டாக்டர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications