தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.. இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்த போகிறதாம்.. மக்களே உஷார்
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் இன்று முதல் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை போட்டு தாக்கி வருகிறது. வேறு ஒரு பக்கம் கோடை வெயிலும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.

வெயிலின் தாக்கம்
கோடை வெயில் தாக்கம் ஆரம்பமானதில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, வேலூர் திருத்தணியில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களிலும், மேற்கு, கிழக்கு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக கோடை மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
ஆனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை வராதா? என்று மக்கள் வானத்தை பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோடையில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் இன்று முதல் தொடங்கியது.

25 நாட்கள் நீடிக்கும்
பொதுவாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 25 நாட்கள் பாடாய்படுத்தி எடுக்கும் . அதன்படி வருகிற மே 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். ஏற்கனவே பலமாவட்ட ங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் நிலவும் நாட்களில் மற்ற நாட்களை விட வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

வெயிலை சமாளிப்பது எப்படி?
எனவே மே 29-ம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்தின் வேலூர், திருத்தணி, சென்னை, இராமநாதபுரம், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்கள் கூறுகின்றன. கோடை வெயிலை சமாளிக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications