அதிமுகவை மீட்கும் நாளில்தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி - சசிகலா சபதம்
அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம் சசிகலா. அதிமுகவை மீட்கும் நாளே நிஜமான தீபாவளி என்று கூறியுள்ளாராம் சசிகலா.
சென்னை: அதிமுகவை மீட்பதே லட்சியம். அன்றைக்குத் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி என சசிகலா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் உறவினர்களுடன் தீபாவளி கொண்டாடிய சசிகலா, தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் தான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறாராம்.
அதிமுகவை கைப்பற்றியே தீர வேண்டும் என்று முனைப்போடு அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார் சசிகலா.
கடந்த மாதம் 26ஆம் தேதி தஞ்சாவூருக்கு வந்த சசிகலா 27ஆம்தேதி நடைபெற்ற டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்.
கடந்த 29ஆம்தேதி கமுதி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் தஞ்சைக்கு வந்தார். கடந்த 1, 2ஆம் தேதிகளில் தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆதரவாளர்களைச் சந்தித்தார். குடும்பம் குடும்பமாக ஆதரவார்கள் சந்திக்க வருவது சசிகலாவை உற்சாகப்படுத்தியுள்ளது. உறவினர்களுடன் தீபாவளி கொண்டாடிய சசிகலா அதிமுகவை மீட்க சபதம் ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி படையல்
தனது ஆதரவாளர்களை சந்திக்க தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள சசிகலா, தனது அண்ணனும், டாக்டர் வெங்கடேஷின் அப்பாவுமான சுந்தரவதனம் இறந்ததையொட்டி தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் நேற்று தீபாவளி படையல் போடப்பட்டது. அதில் கலந்து கொண்டார்.

தீபாவளி கொண்டாட்டம்
தனது அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டிற்குச் சென்றார். மகாதேவன் உயிரிழந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவர் வீட்டுக்குள் சென்ற சசிகலா சில நிமிடங்கள் யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார். இதையடுத்து நடராசனின் தம்பி ராமச்சந்திரன் மகன் டாக்டர் ராஜுவின் குழந்தை மற்றும் நடராசன் சகோதரர்களின் பேரப் பிள்ளைகளுடன் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

அதிமுகவை மீட்பதே லட்சியம்
சசிகலாவை சந்திக்க குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் வந்து செல்கின்றனர். இதனால் அவருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் தான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறாராம். அதிமுகவை மீட்பதே லட்சியம். அன்றைக்குத் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி என சசிகலா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறவினர்களுடன் தீபாவளி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று எந்த விதமான டென்ஷனும் இல்லாமல் தனது முக்கிய உறவினர்களுடன் பட்டாசு வெடித்து சசிகலா தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். சுமார் 30 வருடங்களுக்கு பிறகு தீபாவளி நாளில் சசிகலா தஞ்சாவூரில் இருப்பதுடன் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியது அவரது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம்
சசிகலா முதலில் 3 நாள்கள் மட்டுமே ஆதரவாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு நாள் ஆதரவாளர்களை சந்திக்கப்போகிறார். இன்றும் நாளையும் ஆதரவாளர்களை சந்திக்கும் சசிகலா, 7ஆம் தேதி சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். அதன் பின்னர் அவரது சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

அதிமுகவை மீட்க அடுத்த பயணம்
அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறிய சசிகலா, அதிமுகவை மீட்க கிராமம் கிராமமாக அரசியல் பயணம் கிளம்பி விட்டார். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தாலும் அதிமுகவை கைப்பற்றுவதில் தீவிரமாகவே இருக்கிறார் சசிகலா. தீபாவளி நாளில் சபதமே செய்துள்ளாராம் சசிகலா. அதிமுகவை கைப்பற்றுவாரா சசிகலா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications