பரம்பரையாக அடிமையாக கிடந்தவர்களை மீட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்: ஓபிஎஸ்
வீரமரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் பிறை மதியென வளர்ந்து, நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும், தேசியவாதியாகவும், அனைத்து சமுதாய மக்களுக்கும் இணக்கமான அரசனாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். வீரமரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் பிறை மதியென வளர்ந்து, நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவரைப் போற்றி, அவரது வீர தீர செயல்களை நினைவுகூர்ந்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,

" பரம்பரை பரம்பரையாய் அடிமை தலையில் சிக்குண்ட நாம் பாரத நாடு இன்று அனைத்து உரிமைகளையும் பெற்ற சுதந்திர நாடாக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் இந்தியா முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டதுதான். அவ்வாறு அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவராகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆளவந்த ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய சுதந்திர விதையை விதைத்தவரும், "வானம் பொழியுது, பூமி விளையுது, மன்னன் காணிக்கு வரி ஏன் செலுத்தவேண்டும்?" என்று வினவி தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தையும், மரியாதையையும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரத்தையும், விவேகத்தையும் தன்னகத்தே கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் அனைத்து பாளையக்காரர்களிடமும் தீயாய் பரவி அவர்களின் நெஞ்சங்களில் வீரத்தை விதைத்து அனைவரது மனங்களிலும் அடங்கியிருந்த விடுதலை உணர்ச்சியை தட்டி எழுப்பியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு பாஞ்சாலங்குறிச்சியின் மீது திடீர் தாக்குதலை தொடுத்தது, போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த சூழ்நிலையிலும், ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடியவர் வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதை அடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். மரத்தடியில் விசாரணை நடத்திய ஆங்கிலேய அரசு வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு குற்றவாளி என்று கூறியது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுக்காத வீரபாண்டிய கட்டபொம்மன், "தாய்மண்ணை காப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களை திரட்டினேன், போர் நடத்தினேன்" என வீர முழக்கம் செய்து கொண்டே தூக்குமேடை ஏறினார். தூக்கு மேடை ஏறிய பிறகும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பேச்சில் வீரமும் துணிச்சலும் நிறைந்திருந்தது "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு மடிந்திருக்கலாம்" என்ற உணர்வு வீரபாண்டிய கட்டபொம்மனிடம் மேலோங்கியிருந்தது இப்படிப்பட்ட வீரம் நிறைந்த தமிழ் மண்ணின் தவப்புதல்வர் 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆங்கிலேய அரசால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
இப்படிப்பட்ட மாவீரனுக்கு அன்னாள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு பூங்கா அமைக்கப்படும் என்ற கேள்வி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 9.4 .2013 அன்று எழுப்பப்பட்டபோது, "ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நமது நாட்டின் உண்மையான முதல் சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் தான். அவருடைய தேசபக்தி, அவருடைய தியாகம் யாராலும் மறக்க முடியாதவையாகும். ஆகவே வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கயத்தாறில் தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தை எழுப்பும்" என்று உடனடியாக பதில் அளித்தவர் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள். இதற்கு காரணம் இருவரிடமும் தேசபக்தி மிகுந்து இருந்ததுதான். இதனைத் தொடர்ந்து, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு 18.6. 2015 அன்று திறந்துவைக்கப்பட்டது.
மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும், தேசியவாதியாகவும், அனைத்து சமுதாய மக்களுக்கும் இணக்கமான அரசனாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்திய விடுதலைப் போரில் தன் வாழ்வை துச்சமென மதித்து அன்னை பாரதத்தின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய பாடுபட்டு வீரமரணமடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் வீண் போகாமல் காலம்தோறும் பிறை மதியென வளர்ந்து விடுதலை பெற உதவியதை நினைத்து அந்தப் பெருமை மிக்க அடிச்சுவட்டில் நாம் அனைவரும் நாட்டுப்பற்றுடன் வாழ்வோம் என்று அவர் பிறந்த நாளான இன்று உறுதியேற்போம் குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் இந்த பூமி உள்ளளவிலும் நிலைத்து நிற்கும். வாழ்க இந்தியா..! ஓங்குக வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ்..! என்று ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications