அரசு கலை கல்லூரிகளில் சேரணுமா? இன்று முக்கியமான நாள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் இன்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6- 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1 - 5ம் வகுப்பிற்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் ஏற்கனவே அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
அதேபோல் கல்லூரிகளிலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. இந்த முறை 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் பலரும் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது.
முதலில் 19ம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவு அடைவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் இந்த விண்ணப்பங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 22ம் தேதியோடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து tngasa.in என்ற தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன்பின் கடந்த மாதம் 25ம் தேதி தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதையடுத்து கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது.
இன்று மீண்டும் கலந்தாய்வு: முதல் கட்ட கலந்தாய்வு ரேங்க் அடிப்படையில் நடந்து முடிந்த நிலையில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட வரை நடக்கும். ஜூன் 22-ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு முக்கிய உத்தரவு என்ன? : இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வாங்க கூடாது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும். அரசாணையில் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. எனவே, பார்வையில் குறிப்பிடப்பட்ட அரசாணைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications