ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பக்கம் பார்வையை திருப்பிய அறப்போர் இயக்கம்! பரபரக்கும் கோட்டை!
சென்னை: தமிழகத்தில் 2 முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறி வருகிறது.
கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., கோபால் ஐ.ஏ.எஸ். ஆகிய இருவரும் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் என்றும் அவர்களுக்கு எப்படி திமுக ஆட்சியில் முக்கியத் துறைகளின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது எனவும் வினவியுள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கம் விடுத்துள்ள பதிவு வருமாறு;

அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் டெண்டர் செட்டிங் செய்து ஊழல் செய்த கார்த்திகேயன் IASக்கு திமுக ஆட்சியில் மாநகராட்சிக்கு மேல் உள்ள துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் துறையின் கீழ் தான் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் வருகிறது. கார்த்திகேயன் ஐஏஎஸ் மாநகராட்சி ஆணையராக இருந்த பொழுது நடந்த டெண்டர் செட்டிங் ஊழல் மீது FIR பதிவு செய்து விசாரிக்க அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 இல் புகார் அளித்தது. அதன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்ப கட்ட விசாரணையை முடித்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றமும் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகர எந்த தடையும் இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சொல்லிவிட்டது.
ஆனால் ஊழல் தடுப்பு சட்டப்படி FIR பதிவு செய்ய மாநகராட்சியின் competent authority இடம் அனுமதி வாங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கார்த்திகேயன் ஐஏஎஸ் ஐ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு செயலாளர் ஆக்கியதன் மூலம் அவர் ஊழலுக்கு அவரே அனுமதி தரும் இடத்திற்கு கொண்டு வந்து IAS ஊழலை காப்பாற்ற வழிவகை செய்துள்ளார்.இந்த ஊழலில் கார்த்திகேயன் ஐஏஎஸ் ஐ விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக அறிக்கை அளித்துள்ளார். அதே முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது கார்த்திகேயன் IAS ஐ அதே ஊழல் மீதான விசாரணையை தடுக்கும் இடத்தில் நியமித்துள்ளார்.
இதனால் கடந்த பல மாதங்களாக அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஊழல் மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்களை கிறிஸ்டி நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்க செட்டிங் செய்த கோபால் IAS தற்பொழுது உணவுத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அறப்போர் இயக்கம் புகார் கொடுத்த கிறிஸ்டி ஊழல் குறித்த விசாரணையை தடுக்கும் இடத்தில் தற்பொழுது பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆக ஆக ஆக ஊழல் செய்வதில் அதிக திறமை உள்ளவர்களுக்கு திமுக ஆட்சியில் அதிகாரம் மிக்க உயர் பதவிகள் வழங்கப்படுகிறது. இப்படித்தான் முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த ஆட்சியில் ஊழலுக்கு துணை போனதால் எதிர் கட்சிகளும் இவர்களை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் தங்கள் கட்சியின் நடவடிக்கை ஊழலுக்கு ஆதரவாக இருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள். மக்களாகிய நாம் தான் நமது குரலை உயர்த்தி கேள்வி கேட்க வேண்டும். ஊழல்வாதிகளுக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications