திமுகவை வீழ்த்த ஒற்றைத்தலைமை..கழகம் வாழ்வது யாரால்? எடப்பாடிக்கு ஆதரவாக களைகட்டும் போஸ்டர்கள்
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை: ஒற்றை இலக்கு திமுகவை வீழ்த்துவது..ஒற்றை தலைமை எடப்பாடி ஐயா என்று சேலத்தில்
அதிமுக சாதாரண தொண்டர்களின் விருப்பம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Recommended Video
அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரட்டை தலைமை உள்ளது. ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவடைந்துள்ளது.
அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதற்கான பணிகள் குறித்து விவாதிக்கும் வகையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த திங்கள் அன்று கட்சி அலுவலகத்தில் நடந்தது.

ஒற்றைத்தலைமை கோரிக்கை
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.
ஒற்றை தலைமை கோரி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போஸ்டர் யுத்தம்
இந்த நிலையில் சென்னை ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒற்றை தலைமை ஆதரித்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோருக்கு தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. நேற்றைய தினம் தேனி, பெரியகுளம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

சாலை மறியல்
தொண்டர்களின் பாதுகாவலர் ஓபிஎஸ் என்று சென்னையில் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் நேற்று சுவரொட்டி ஒட்டி இருந்தனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீடு அருகே ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதை சிலர் கிழித்து வீசினர். இதை கண்டித்து ஓபிஎஸ் வீடு அமைந்துள்ள சாலை முன் அமர்ந்து அவரது ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பயணம்
கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நிலையில் இன்றைய தினம் சேலம் சென்றுள்ளார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒற்றை இலக்கு
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், ஒற்றை இலக்கு திமுகவை வீழ்த்துவது..
ஒற்றை தலைமை எடப்பாடி ஐயா என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. கழகம் வாழ்வது யாரால் கழகம் வீழ்ந்தது எவரால் தொண்டர்களே சிந்தியுங்கள் என்று வக்கீல் மணிகண்டன் என்பவர் போஸ்டர் அடித்துள்ளார். சாதாரண அதிமுக தொண்டன் விருப்பம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கூடும் வரை போஸ்டர் யுத்தம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications