சென்னையில் பிரம்மாண்டமாக ஆறாவது ஏரி.. திருப்போரூரில் 4375 ஏக்கரில் அமைகிறது.. அரசு அறிவிப்பு
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும், மாறி வரும் பருவ நிலை மாற்றத்தினாலும் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்கவும் சென்னையில் ஆறாவது நீர் தேக்கம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். திருப்போரூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள மிகப்பெரிய நீர்வழிப்பாதையில் இந்த புதிய நீர்தேக்கம் 4375 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் தற்போது செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து குடிநீர் தேக்கங்கள் உள்ளன.இந்த ஐந்து பெரிய ஏரிகளின் மூலமும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், தெலுங்கு கால்வாய் திட்டம் மூலம் கிருஷ்ணா நதி மூலம் குடிநீர் கிடைக்கிறது. இந்நிலையில் சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் பகுதியில் 4375 ஏக்கரில் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்றைக்கு பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு கூறும் போது, "சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் ஆதாரங்கள் , கடல் நீர் ஆதாரங்கள் மூலம் கிடைக்க பெறும் குடிநீரை கொண்டு சென்னை மாநகரின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும், மாறி வரும் பருவ நிலை மாற்றத்தினாலும் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்கவும் புதிய நீர்தேக்கங்களை அமைப்பது இன்றியமையதாதது ஆகும்.
அந்த வகையில் சென்னைக்கு அருகே உள்ள கோவளம் உபவடிநிலத்தில் பருவ காலங்களில் கிடைக்கும் வெள்ள நீரின் ஒரு பகுதியை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் பழைய மகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 4375 ஏக்கர் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் சுமார் 1.6 டிஎம்சி கொள்ளவில், ஆண்டிற்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் அளவிற்கு சென்னையின் ஆறாவது நீர்தேக்கமாக புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும்.
அந்த 4375 ஏக்கர் அளவு நீர் தேக்கம் 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வாரு ஆண்டும் கிடைக்கக்கூடிய 160 எம்எல் குடிநீரை கொண்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவை, குறிப்பிடத்தக்க அளவில் நீண்ட காலத்திற்கு நிறைவு செய்யப்படும்.. இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில நீர் வளத்துறைக்கு 9460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தங்கம் தென்னரசு வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், தற்போது பெருநகர சென்னை மாநகராட்சின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஐந்து நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு குடிநீர் நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவைப்படும் போது ஒரு பகுதியின் உபரி நீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயலவில்லை.. எனவே முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம் எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து நீர்ப்பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். சமச்சீரான குடிநீர் விநோயகத்தை உறுதி செய்திடும் இத்திட்டம் 2423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு நிறைவேற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications