சூடி பிடிக்கும் கோடநாடு வழக்கு விசாரணை.. தடை கேட்கும் அனுபவ் ரவி.. செப்.7ல் உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் காவல்துறை நடத்தி வரும், கூடுதல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை வரும் 7ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று எஸ்.பி ஆசிஷ் ராவத் தெரிவித்திருந்தார்.
இந்த தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக பிரமுகர்
கோடநாடு வழக்கு தொடர்பாக விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் சயான் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இவ்வாறு விசாரணை தீவிரமடைந்த நிலையில்தான், வழக்கின் சாட்சியான அதிமுக பிரமுகர், அனுபவ் ரவி என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மீண்டும் விசாரணை தேவையில்லை
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏராளமான சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவல் துறையினர் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்துவதாகவும், கூடுதல் விசாரணை நடத்திட காவல் துறைக்கு தடை விதித்திடுமாறும், அனுபவ் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்த தடை கிடையாது என்று கூறியது. அனுபவ் ரவியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து ஹைகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.

ஆட்சி மாற்றத்தால் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தால் மேல் விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், சுப்ரீம்கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் சென்னை ஹைகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தடை விதிக்குமா
இந்த மனுவை செப்டம்பர் 7ம் தேதி அதாவது, வரும் செவ்வாயன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கு சூடு பிடித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதிக்குமா, விசாரணை தொடர அனுமதி வழங்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

விசாரணை ஏன்?
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications