தொழிலாளர் நல நிதியுதவி வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்! கடைசி தேதி இதுதான்.. நல வாரியம் அறிவிப்பு
சென்னை: தொழிலாளர் நல நிதியுதவி பெறுவதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
முறைசாராத தொழில்களில் ஈடுபடுவோரை பாதுகாக்க கடந்த 1972ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் இயற்றப்பட்டது. இது கடந்த 1973ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்களை முறைசாரா தொழிலாளர்களாக பதிவு செய்பவர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை அரசு வழங்குகிறது. இந்த குழந்தைகள் தொழிற்பயிற்சிக் கல்வி, மேல்நிலைக் கல்வியை பயின்றால் அவர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதே உடற்பயிற்சி கல்வி பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு, மருத்துவப் பட்டயப்படிப்பு, பொறியியல் பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இது தவிர உடற்பயிற்சி கல்வி பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு, விவசாய படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு , மருத்துவ பட்டப்படிப்பு, சட்டப் பட்டப்படிப்பு பயிலும் பிள்ளைகளுக்கு ரூ.8,000 வழங்கப்படும்.
மேலும், பொறியியல் பட்ட மேற்படிப்பு, மருத்துவ பட்ட மேற்படிப்பு, சட்ட பட்ட மேற்படிப்பு, விவசாய பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்ட மேற்படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்ட மேற்படிப்பு பயிலும் பிள்ளைகளுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர திருமண உதவித்தொகை, மூக்கு கண்ணாடிக்கான உதவித்தொகை, கணினி பயிற்சி உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகை, விபத்து மரணம் உதவித்தொகை என ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்படுகிறது.
எனவே இதனை பெறுவதற்கு வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. இந்த உதவி தொகையை பெருவதற்கு சில தகுதிகள் இருக்கின்றன. அதாவது, தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
அதேபோல இதனை பெற தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்). தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல். ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்). வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்)-2 ஆகியவற்றை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். ஆண்டு தோறும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் மாதம் 31ம் தேதிதான் கடைசி தேதியாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரில் அல்லது http://www.lwd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை 'செயலர், தமிழ் நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.












Click it and Unblock the Notifications