எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு.. விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது
சென்னை: 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படும் எம்சிஏ., எம்.பி.ஏ., படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தோ்வு விழுப்புரத்தில் நாளை (மார்ச் 22) நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக டான்செட் நுழைத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படும் எம்சிஏ, எம்பிஏ படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தோ்வு விழுப்புரத்தில் நாளை (மாா்ச் 22 ஆம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விழுப்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் இரா.செந்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரும் கல்வி ஆண்டுக்கான (2025 - 26) எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான நுழைவுதோ்வு (தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு - டான்செட் 2025) மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு நடத்தப்படவுள்ளது.
விழுப்புரம் காகுப்பம் பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.சி.ஏ. படிப்புக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்.பி.ஏ. படிப்புக்கும் நுழைவுத் தோ்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.
இந்தத் தோ்வை சுமாா் 950 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தோ்வு எழுதுவோரின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காகுப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு அரசுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications