சென்னை உட்பட 4 மாவட்டங்களில்.. புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி - தமிழக அரசு
சென்னை: கனமழையால் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் 11ம் தேதி வரை சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டன. தற்போது குடியிருப்பு பகுதிகளில் இருந்த வெள்ளம் பெரும்பாலும் வடிந்திருக்கிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. மறுபுறம் பள்ளிகளும் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன. பள்ளி வளாகங்களிலும், மைதானங்களிலும் இன்னும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது.

எனவே மழைநீரை அகற்ற, மரம் விழுந்தது, ஓடுகள் சேதம், மின் இணைப்பு பாதிப்புகள் ஆகியவற்றை சரி செய்யவும் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த தொகை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் என பிரித்து வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மழை வெள்ளம் காரணமாக சுமார் ஒரு வாரம் வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

வரும் 11ம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, பள்ளி வளாகங்களில் இருக்கும் உடைந்த பொருட்களையும் கட்டட இடிபாடுகளையும் அகற்றிட வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும், அறைகளையும் தூய்மைப்படுத்த வேண்டும். பள்ளி வளாகம் முழுமையாக தூய்மை செய்து, வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றிட வேண்டும்.
பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம், எனவே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். விளையாட்டுத்திடலை மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக மாற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications