பர்ஸை பாதுகாக்க இதுதான் சேஃப்..பறக்கும் படையால் பாதாளத்தில் வியாபாரம்! மாத்தி யோசிக்கும் வியாபாரிகள்
சென்னை: தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் போதும் பறக்கும் படை சோதனை என்ற பெயரில் தங்களை துன்புறுத்துவதாக வியாபாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால் வியாபாரம் பாதாளத்தில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகளின் கெடுபிடிகள் மாட்டு வியாபாரம், சிறு குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதற்காக மாற்று வழியினை வியாபாரிகள் பின்பற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
பறக்கும் படை சோதனை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு நகை பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக தாம்பரத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் நகை பணம் பரிசுப் பொருட்கள் என தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
வியாபாரிகள் குமுறல்: இது ஒருபுறம் இருக்க ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்ல தடை என்ற உத்தரவால் தாங்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர் வியாபாரிகள். சாதாரணமாக ஒரு பசுமாடு ஒன்றின் விலையை 50 ஆயிரம் ரூபாய் தாண்டி இருக்கும் நிலையில் அதற்கு எப்படி ஆவணம் எடுத்து செல்ல முடியும் என கேள்வி எழுப்பும் வியாபாரிகள் இது தொடர்பாக தங்கள் குமுறல்களை கொட்டி தீர்த்துள்ளனர். பணப்பட்டுவாடாவை தவிர்ப்பதற்காகவே தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இரு சக்கர வாகனங்கள் கார் வேன் லாரி உள்ளிட்ட பல்வேறு தனியார் வாகனங்களில் இரவு பகல் பாராது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடுமையான சோதனை: தமிழகம் மட்டுமன்றி தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்கள் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றது. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலங்களில் காய்கறிகள் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே சிறு வியாபாரிகள், கடை வைத்திருப்போர் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. காரணம் பத்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான பொருட்களை கொள்முதல் செய்யும் பொதுமக்கள் அதனை வங்கி கணக்குகளில் செலுத்துவதில்லை.
ஆவணங்கள் இல்லை: இதனால் கையில் பணத்தோடு வாடகை சரக்கு வாகனங்கள் அல்லது கார்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று பொருட்களை கொள்முதல் செய்து பணத்தை செலுத்தி வருவது வழக்கமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் மாட்டு வியாபாரம் உரம் கொள்முதல் விவசாய பொருட்களை விற்பனை செய்து விட்டு வரும் வியாபாரிகளிடம் இது போன்ற ஆவணங்கள் இருப்பதில்லை. இதனால் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பேருந்து பயணம்: மேலும் அரசியல் கட்சியினரை விட்டு விட்டு வியாபாரிகளை குறிவைத்து இது போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் புகார் எழும்பியுள்ளது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஏற்கனவே பணம் கொண்டு செல்லப்பட்டு விட்ட நிலையில் கண்துடைப்புக்காக வியாபாரிகளிடம் சோதனை மேற்கொண்டு அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதாக கூறுகின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயணம் செய்து லாரிகளில் பொருட்களை ஏற்றிவிட்டு வருவதாக கூறுகின்றனர்.
விலக்கு அளிக்க வேண்டும்: மேலும் கடைகளில் வியாபாரத்தை முடிந்ததும் பணத்தை எடுத்துக்கொண்டு பொருட்களை வாங்க செல்லும் நிலையில் அதற்கு ஆவணங்கள் இருக்காது எனவே அதனை வங்கியில் செலுத்தி விட்டு பொருட்களை பெறும் இடத்திற்குச் சென்றதும் அங்கு ஏடிஎம்களில் பணத்தை எடுத்து பொருட்களை வாங்குவதாகவும் இதனால் தேவையற்ற குழப்பம் அலைச்சல் ஏற்படுவதோடு மிகவும் சிரமத்தை சந்திக்க வேண்டி இருப்பதால் வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை என்ற உத்தரவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications