பெண் காவலர்கள் பாதுகாப்பில் பெலிக்ஸ் ஜெரால்டு! சென்னைக்கு சென்ற போலீஸ்.. வீட்டில் திடீர் சோதனை..!
சென்னை: சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசாரின் சோதனை நடைபெற்று வருகிறது.
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெலிக்ஸ் ஜெரால்டு: இதற்கிடையே சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து அவர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசும் வகையில் கேள்வி கேட்டதாக பெலிக்ஸ் ஜெரால்டு மீது குற்றம் சாட்டப்பட்டது . இதையடுத்து பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது நீதிபதி குமரேஷ் பாபு கடுமையான கண்டனங்களை கூறியிருந்தார்.
நொய்டாவில் கைது: மேலும் யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும். நேர்காணல் தர வருபவர்களை அவதூறு கருத்துக்களை கூற தூண்டும் விதமாக பேட்டி எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் முன் ஜாமின் மனு நிலுவையில் இருக்கும் போது பெலிக்ஸ் ஜெரால்டு தலைமறைவானார். அவர் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நொய்டா பகுதியில் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்
சென்னையில் பெலிக்ஸ்: இதற்கிடையே தனது கணவரை காணவில்லை எனவும் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி கண்ணீருடன் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை அழைத்துவரப்பட்டார். டெல்லியில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை சென்னை அழைத்து வந்த போலீசார் திருச்சி அழைத்துச் சென்றனர். அங்கு மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை மற்றும் வாக்குமூலத்தை பெற்றனர் அதனை தொடர்ந்து திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஜெரால்டு ஆஜர் படுத்தப்பட்டார்.
சிறையில் அடைப்பு: வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா ஃபெலிக்சை மே 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பெலிக்ஸ் ஜெரால்ட் அடைக்கப்பட்டார் அப்போது இது தனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் என்றாவது ஒருநாள் இது நிகழும் என்று முழக்கமிட்டவரே சென்றார். இதை அடுத்து அவரை தடுத்து நிறுத்தி கூடுதலாக பேசவிடாமல் காவல்துறையினர் அழைத்துச் சென்றார்.
வீட்டில் சோதனை: இந்த நிலையில் சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூட்யூப் சேனலில் ஒளிபரப்பியதற்காக பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் இருந்து சென்னை சென்ற திருச்சி சைபர் கிரைம் போலீசார் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் டிஜிட்டல் ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications