தான செட்டில்மென்ட் செய்த நிலத்திற்கு பட்டா பெற முடியுமா? ஒரே நிலத்திற்கு இரண்டு பட்டாவா? சூப்பர் வழி
சென்னை: நிலத்தின் உரிமைக்கு மிக முக்கியமான அத்தாட்சியாக விளங்குவது பட்டா ஆகும்.. ஒரு நிலம் யாருக்கு சொந்தமானது என்பதையும், அதன் பரப்பளவு மற்றும் எல்லைகள் எவை என்பதையும் அரசு அங்கீகரிக்கும் முதன்மை ஆவணமாக இது கருதப்படுகிறது.. சொத்துப் பரிமாற்றங்கள், வங்கி லோன்கள் மற்றும் அரசு இழப்பீடுகள் என எதற்கும் பட்டா ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கிறது.. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டா தொடர்பாக எழும் சிக்கல்கள் மற்றும் நடைமுறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வது நில உரிமையாளர்களுக்கு மிகவும் அவசியமாகும்..
ஒரு நிலத்திற்கு இரண்டு பட்டாக்கள் இருக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.. சட்ட ரீதியாகப் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணை கொண்ட ஒரே நிலப்பரப்பிற்கு இரண்டு வெவ்வேறு நபர்களின் பெயரில் பட்டாக்கள் இருக்க வாய்ப்பில்லை..

டபுள் பட்டா சிக்கல்கள்
ஆனால், நடைமுறையில் சில தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பழைய ஆவணங்கள் சரியாகப் புதுப்பிக்கப்படாத காரணத்தினாலோ இத்தகைய குழப்பங்கள் நேரலாம்.. உதாரணமாக, ஒரு பெரிய நிலம் பல பாகங்களாகப் பிரிக்கப்படும்போது, அளவீட்டில் ஏற்படும் தவறுகளால் ஒருவரின் எல்லை மற்றொருவரின் பட்டாவில் பதிவாகிவிடக்கூடும்..
இது போன்ற "டபுள் பட்டா" சிக்கல்கள் பெரும்பாலும் நில அபகரிப்பு அல்லது தவறான ஆவணப் பதிவுகளாலேயே உருவாகின்றன.. இவ்வாறான சூழலில், பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டு, முறையான விசாரணைக்குப் பின் தவறான பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
தான செட்டில்மென்ட் செய்த நிலத்துக்கு பட்டா
அடுத்ததாக, தான செட்டில்மென்ட் செய்த நிலத்துக்கு பட்டா பெற முடியுமா??? இதை பற்றியும் பலருக்கு குழப்பம்தான்.. தான செட்டில்மென்ட் எனப்படும் நிலப் பகிர்வு முறையில் பட்டா பெறுவது மிகவும் எளிமையான அதேசமயம் கவனமாகச் செய்ய வேண்டிய செயலாகும்.. ஒரு நபர் தனது நிலத்தை ரத்த சம்பந்தமான உறவுகளுக்கோ அல்லது பிறருக்கோ பிரதிபலன் எதிர்பாராமல் எழுதித் தரும்போது அது தான செட்டில்மென்ட் எனப்படுகிறது..
இந்த முறையில் நிலத்தைப் பெற்றவர் உடனடியாகத் தனது பெயருக்குப் பட்டா மாறுதல் செய்வது பாதுகாப்பானது.. இதற்கு முதலில் அந்தத் தானப் பத்திரத்தைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.. பதிவு செய்யப்படாத வெறும் கடிதங்கள் அல்லது உறுதிமொழிகளை வைத்து வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் செய்ய இயலாது..
பத்திரத்தின் நகல், நிலத்தின் முந்தைய பட்டா
பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல், நிலத்தின் முந்தைய பட்டா, வில்லங்கச் சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுகளுடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்..
உங்கள் விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரால் சரிபார்க்கப்பட்டு, நிலத்தின் எல்லைகளில் மாற்றம் ஏதுமில்லை என உறுதி செய்யப்பட்டால் வட்டாட்சியர் உங்கள் பெயருக்குப் புதிய பட்டாவை வழங்குவார்..
ஒருவேளை கூட்டுப் பட்டாவிலிருந்து ஒரு பகுதியை மட்டும் தானமாகப் பெற்றிருந்தால், அந்த நிலத்தை உட்பிரிவு செய்து தனிப் பட்டாவாக மாற்றிக் கொள்வது எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.. இவ்வாறு முறையான ஆவணங்களுடன் அணுகினால் நிலத்தின் உரிமையை முழுமையாக நிலைநாட்ட முடியும்..












Click it and Unblock the Notifications