திமுகவிடம் 12 தொகுதிகள் கேளுங்கள்.. திருமாவளவனுக்கு அழுத்தம் தரும் சிறுத்தைகள்.. கௌரவப் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக, அதிமுக கூட்டணியில், எந்த கட்சிக்கு எத்தனை சீட், எந்த தொகுதி என்று பேரங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் அனைவரது கவனமும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்ற விசிக, இந்த முறை ஒரு பெரிய இலக்கை முன்வைத்து களம் இறங்கத் தயாராகி உள்ளது. மாநில கட்சி அங்கீகாரத்தை தக்கவைக்க அந்தக் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இந்த தேர்தலில் விஜய் களம் இறங்கி உள்ளதால், கணிசமான ஓட்டுக்களை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு கூட்டணியும் முக்கியம் என திமுக, அதிமுக நினைக்கின்றன. அதனால் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்கின்றன. இதில் ஆளும் கட்சி கூட்டணியான திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி வருகிறது. மறுபக்கம் விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதி வேண்டும் என்று அழுத்தம் தருகிறது. இதேபோல் இடதுசாரிகளும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Thirumavalavan vck dmk politics

12 தொகுதிகள் வேண்டும்

இதில் விசிகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் என்பது வெறும் வெற்றி-தோல்வி சார்ந்தது மட்டுமல்ல, அது கட்சியின் எதிர்கால அடையாளம் சார்ந்தது. ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட சதவீத வாக்குகளையும் இடங்களையும் பெற வேண்டும். இதனைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் விசிக இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளில் (குறைந்தது 12 தொகுதிகள்) போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம்

தொண்டர்களின் நெருக்கடி

"நாம் ஏன் எப்போதும் 6 இடங்களோடு திருப்தி அடைய வேண்டும்?" என்ற கேள்வி விசிக தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளதாம். திருமாவளவன் அவர்களுக்குள்ளிருக்கும் நெருக்கடி என்னவென்றால், கட்சியின் செல்வாக்கு வளர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஒற்றை இலக்க இடங்களை வாங்கினால் அது தொண்டர்களின் ஆர்வத்தைக் குறைத்துவிடும் என்பது தானாம். "12 தொகுதியாவது திமுகவிடம் கேட்டு வாங்குங்கள்" என்று நிர்வாகிகள் திருமாவளவனுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம். கட்சிக்காக உழைத்துவரும் நிர்வாகிகளுக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும். ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளைக் கொடுத்தால் ஏற்கெனவே போட்டியிட்டவர்களுக்கே சரியாய் போய்விடும் என்பது அவர்களின் மனக்குறையாக உள்ளது.

சீட் ஷேரிங்கில் உள்ள சிக்கல்கள்

திமுக தரப்பைப் பொறுத்தவரை, அக்கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, மக்கள் நீதி மய்யம் எனப் பெரிய பட்டாளமே இருக்கிறது.இதில் திமுக அதிக இடங்களில் (சுமார் 160+) தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அப்போதுதான் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைத் தக்கவைக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு குறையும் சீட்

எனவே மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கியது போக, விசிகவுக்கு 12 இடங்களைத் தருவது திமுகவுக்குப் பெரிய சவாலாக இருக்கும். இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கே தொகுதிகளை குறைவாக வழங்க வேண்டும் என்று திமுகவினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். எனவே திமுக காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..

பானை சின்னம்

இப்படியான சூழலில் விசிக 12 தொகுதிகள் கேட்பதால், திமுக சம்மதிக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.அதேநேரம் ஒருவேளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொன்னால், விசிகவிற்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு, ஆனால் விசிக தனது தனித்துவத்தைக் காக்க 'பானை' சின்னத்திலேயே போட்டியிட விரும்புவது பேச்சுவார்த்தையில் இழுபறியை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.

திமுகவிற்கு அழுத்தம்

விசிக இந்த முறை வெறும் பேச்சுவார்த்தையோடு நின்றுவிடப் போவதில்லை. வடதமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் வாக்கு வங்கியை ஆதாரமாகக் காட்டி திமுகவிற்கு அழுத்தம் தர திட்டமிட்டிருக்கிறது. "சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால், எங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்" என்பதே விசிக தரப்போகும் இறுதி அழுத்தமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

விசிக ஏற்குமா

திமுக தரப்போகும் 'ஆறுதல்' இடங்களை விசிக ஏற்குமா? அல்லது தனது பிடியில் உறுதியாக இருக்குமா? என்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வி. திருமாவளவன் எடுக்கும் முடிவு, வரும் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியையும் விசிகவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+