மிஷன் நார்த் இந்தியா! வட மாநில அரசியலை அலறவிடப்போகும் "விஜய் மாடல்".. களமிறங்கிய தவெக டிஜிட்டல் டீம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் இருமுனைப் போட்டியை உடைத்து, 108 இடங்களுடன் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) தலைவர் விஜய்.
இப்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி, இந்தத் தேர்தலில் விஜய்க்கு பின்னால் இருந்து வேலை செய்த டிஜிட்டல் நிபுணர்கள் மற்றும் தேர்தல் வியூகவாதிகள், தங்களின் இந்த வெற்றிகரமான 'விஜய் மாடலை' இந்தியா முழுவதும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' (I-PAC) நிறுவனம் போல, ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தைத் தொடங்கி, வட மாநிலங்கள் மற்றும் பிற மாநிலத் தேர்தல்களில் போட்டியிடும் பெரிய அரசியல்வாதிகளுக்கு இந்த வியூகங்களை விற்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வட மாநிலங்களை ஈர்க்கும் 3 முக்கியமான தந்திரங்கள்
1. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels):
முன்பெல்லாம் அரசியல்வாதிகள் பெரிய மேடைகள் அமைத்து, மைக் பிடித்துப் பேசினால் மட்டும்தான் மக்கள் கவனிப்பார்கள். ஆனால், விஜய் தரப்போ மக்களின் மொபைல் போன்களையே தங்களின் பிரச்சார மேடையாக மாற்றியது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மிகக் குறுகிய வீடியோக்களைப் பரப்பினர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வீடியோக்கள் சிறு குழந்தைகளையும், மாணவர்களையும் பெருமளவில் கவர்ந்தன. அவர்கள் மூலமாக வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் விஜய்யின் மீதான ஒரு நல்ல பிம்பம் தானாகவே போய் சேர்ந்தது. இதையே மற்ற மாநிலங்களிலும் பயன்படுத்த இந்த நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
2. பூத்-லெவல் வாட்ஸ்அப் குழுக்கள்:
டிவிகே-வின் டிஜிட்டல் குழுவினர் ஒவ்வொரு வாக்குச்சாவடி (Booth) அளவிலும் ரகசிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கினர். எதிர்க்கட்சிகள் ஏதாவது விமர்சனம் செய்தால், அடுத்த சில நிமிடங்களில் அதற்குப் பதில் கொடுக்கும் வகையில் இந்த குழுக்கள் மூலம் தகவல்கள் மக்களிடம் நேரடியாகப் பரப்பப்பட்டன. பெரிய அளவில் கட்சியின் தொண்டர்கள் இல்லாத இடத்திலும், இந்த வாட்ஸ்அப் நெட்வொர்க் மூலமாகவே தேர்தல் வேலைகளை மிக எளிதாகச் செய்து முடித்தனர்.
3. புதிய அரசியல் பிம்பம் (Narrative Setting):
பொதுவாக அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று கடுமையாகத் திட்டிக் கொள்ளும். ஆனால், விஜய்யின் டிஜிட்டல் குழுவினர் வசைபாடுவதைத் தவிர்த்து, 'மாற்று அரசியல்' என்ற புதிய பிம்பத்தை உருவாக்கினர். இல்லையென்றால் என்ன தவறு நடந்தாலும் அதற்கு திமுகதான் காரணம் என்று அரசியல் பிம்பத்தை உருவாக்கினார்கள். வேலைவாய்ப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, லஞ்சமில்லாத நிர்வாகம் போன்ற சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை மட்டுமே சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசினர். இதற்க்ய் எல்லாம் திமுகதான் காரணம் என்பது போல ராட்சச பிம்பத்தை உருவாக்கினார்கள். இது தமிழ்நாட்டில் உள்ள நடுநிலை வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க பெரிதும் உதவியது.
வட இந்தியாவில் 'தமிழ்நாட்டு மூளை'
வட மாநிலங்களில் வழக்கமாக சாதி, மதம் மற்றும் பணத்தை வைத்தே தேர்தல்கள் அதிகம் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தத் தமிழ்நாட்டு டிஜிட்டல் குழுவினர், வட மாநிலங்களில் இருக்கும் இளைஞர்களையும், முதன்முறை வாக்களிக்கும் புதிய தலைமுறையினரையும் குறிவைத்து ஒரு புதிய வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆலோசகர்கள் வந்த காலம் போய், இப்போது தமிழ்நாட்டின் 'டிஜிட்டல் மூளைகள்' வட இந்தியத் தேர்தல்களின் திசையைத் தீர்மானிக்கப் புறப்பட்டிருப்பது, இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த அசுர வெற்றிக்கு பின்னால் இருந்து உழைத்த டிவிகே-வின் "டிஜிட்டல் வார் ரூம்" (Digital War Room) சாணக்கியர்கள், இப்போது தேசிய அளவில் கவனிக்கப்படும் நபர்களாக மாறியுள்ளனர். பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' (I-PAC) நிறுவன பாணியில், இந்தத் தேர்தலில் தாங்கள் பயன்படுத்திய வியூகங்களை ஒரு பிராண்டாக மாற்றி, வட மாநிலங்கள் மற்றும் பிற மாநிலத் தேர்தல்களில் களம் காணும் அரசியல்வாதிகளுக்கு விற்பனை செய்ய தற்பொழுது அவர்கள் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications