இதயம் நொறுங்கிவிட்டது.. மனைவி சாய்ரா பானு பிரிவால் கலங்கிய ஏஆர் ரஹ்மான்.. உருக்கமான பதிவு
சென்னை: 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏஆர் ரஹ்மான் - மனைவி சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஏஆர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் இதயம் நொறுங்கிவிட்டது'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா பிரபலங்களில் எந்த வித சர்ச்சையில் சிக்காமல் இருந்த வந்த ஜோடி தான் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு. பிரபல இசையமைப்பாளராகவும், ‛ஆஸ்கர்' வென்ற நாயகனாக இருந்தாலும் கூட ஏஆர் ரஹ்மான் கிசுகிசு மேட்டர்களில் சிக்கியது இல்லை.

இந்நிலையில் தான் திடீரென்று ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி பிரிந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிவை அறிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ள நிலையில் இருவரின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் எங்களின் எண்ணம் அதனை காண முடியாத நிகழ்வாக மாறி உள்ளது. நொறுங்கிய எங்களின் இதயத்தின் எடையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கலாம். பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்டவைக்க நினைத்தபோது அதற்கான பொருத்தமான இடம் இல்லை.
இந்த மோசமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் மீது அன்பு காட்டி தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் - சாய்ரா தம்பதியின் இந்த பிரிவு என்பது ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
முன்னதாக சாய்ரா பானு - ஏஆர் ரஹ்மான் ஆகியோர் கூட்டாக தங்களின் பிரிவு பற்றி வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். அந்த அறிக்கையில், ‛‛"சாய்ரா பானு, அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் வந்தனா (வழக்கறிஞர்) மற்றும் அவரது அசோசியேட்ஸ் சார்பில் இந்த கூட்டு அறிக்கை வெளியிடுகிறது. திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு மற்றும் அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளனர்.
உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.
இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் எடுத்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications