சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் வீட்டில் திருட்டு.. பின்பக்க கதவின் பூட்டை உடைத்த நபர்.. சிக்கிய தடயம்
சென்னை: நடிகர் ராஜ்கமல்- லதா ராவ் ஆகிய தம்பதிக்குச் சொந்தமான வீட்டில் நடந்த திருட்டில் முக்கிய தடயம் சிக்கியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்கமல் , இயக்குநர் கே பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர். இவர் தமிழ் சீரியல்களில் நடித்திருந்தார். சண்டிக்குதிரை, மேல்நாட்டு மருமகள் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருந்தார். இவர் சஹானா எனும் டிவி சீரியலிலும் நடித்திருந்தார். இவர் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடனம் ஆடியிருந்தார். இவருடன் நடிகையும் மனைவியுமான லதா ராவ் கலந்து கொண்டார்.

ராஜ்கமல் ரஜினி நடித்த லிங்கா படத்திலும் நடித்திருந்தார். மனைவி லதா ராவ் பெங்களூரை சேர்ந்தவர். இவர் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர்களுக்கு இரு மகள்கள்- லாரா மற்றும் ராகா. லதா தில்லாங்கடி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தார்.
அது போல் கோட்டிகோப்பா 2, அதிசய உலகம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரவாயலில் கிருஷ்ணா நகர் 15 ஆவது தெருவில் ஒரு வீட்டை கட்டியுள்ளனர். அதற்கு Rajkamal (RK) Shooting House என பெயரிட்டுள்ளனர். இவர்கள் வேறு பகுதியில் வசித்து வருவதால் இங்கு ஷூட்டிங் நடத்திக் கொள்ள வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அது போல் விளம்பர படங்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஷூட்டிங் நடக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் இந்த வீடு பூட்டியே இருக்கும்.
இந்த நிலையில் இந்த வீட்டில் திருட்டு போயுள்ளதாக லதா புகார் அளித்துள்ளார். இந்த வீட்டில் சனிக்கிழமை இரவு மர்மநபர்கள் பின்பக்க பூட்டை உடைத்து திருடியுள்ளனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை சுத்தம் செய்ய பணிப்பெண் வந்துள்ளார் . அப்போது மின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து ராஜ்கமலுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் நேராக வந்து வீட்டை பார்வையிட்டார். அப்போது அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ 1 லட்சம் மதிப்பிலான டிவி மற்றும் மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார். போலீஸார் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது முக்கிய தடயம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அது போல் கிருஷ்ணா நகரில் உள்ள பாஜக பிரமுகர் பொன் பிரபாகர் வீட்டிலும் கார் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயுள்ளது. ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு போனதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications