அரசுக்கு கெட்ட பேரு ஏற்படுத்த பார்க்குறாங்க.. அமைச்சர் நாசர் கோபம்!
பால் விநியோகம் தடையின்றி சீராக நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்கட்சியினர் தூண்டி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் பால் விநியோகத்தில் தடை ஏற்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். எதிர்கட்சியினர் தூண்டுதல் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் கொடுப்பது போல லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்காவிட்டால் ஆவின் நிறுவனத்திற்கு பாலை விநியோகம் செய்யப்போவதில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று முதல் பல ஊர்களில் பால் உற்பத்தியாளர்கள் சாலைகளில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. அவ்வாறு உயர்த்தாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தை தோல்வி
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

கோரிக்கைகள் என்ன?
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன், பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது.

கொள்முதல் விலை எவ்வளவு
அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டது. அதன்படி பசும்பால் லிட்டருக்கு 32 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், எருமை பால் 41 ரூபாயில் இருந்து 44 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 51 ரூபாயும் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.

ஆவினுக்கு பால் இல்லை
பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, 17ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர். அதன்படி இன்று பல லட்சம் லிட்டர் பாலை உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு அனுப்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் நாசர் விளக்கம்
பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பாலை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த போராட்டம் குறித்து செய்தி சேனலுக்கு விளக்கம் அளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் பாலுக்கு இதுவரை தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார். பால் விநியோகம் சீராக நடைபெறுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சியினர் தூண்டுதலின் பேரில் ஒருசில சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications